பிரதமருக்கு திமுக கருப்புக்கொடி காட்டினால்... நாங்கள் பச்சைக்கொடி காட்டுவோம்...! அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்கட்சிகள் கருப்புக் கொடி காட்டினால், அதிமுகவினர் பச்சைக் கொடி காட்டுவார்கள் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், வரும் 12 ஆம் தேதி பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அவருக்கு கருப்புக் கொடி காட்ட வேண்டும் என்றும், வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றுவதோடு அன்று கருப்பு சட்டை அணிய வேண்டும் என்றும், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக் கொடி காட்டப்படும் என திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் 12 ஆம் தேதி சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக வீடுகளில் கருப்புகொடி கட்ட வேண்டும். கருப்புச்சட்டை அணிய வேண்டும் என்று தமிழக மக்களுக்கு அனைத்துக்கட்சி தலைவர்கள் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது. 

இது தொடர்பாக தி.மு.க. திராவிடர் கழகம், காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட அனைத்துக்கட்சி தலைவர்கள் அழைப்பு என்ற தலைப்பில் தி.மு.க. தலைமை அலுவலகம் சார்பில் விடுக்கப்பட்டு உள்ள் அறிக்கையில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்கட்சிகள் கருப்புக்கொடி காட்டினால், அதிமுகவினர் பச்சைக்கொடி காட்டுவார்கள் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். மேலும் காவிரி நீரைப் பெற பிரதமருக்கு உரிய அழுத்தம் கொடுப்போம் என்றும் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். மு.க.,ஸ்டாலினின் நடைபயணம் மக்களை திசை திருப்பும் நாடகம் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம்அமைப்பது பற்றி நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்து சரியானது என்றும் ராஜேந்திர பாலாஜி கூறினார்.