கிருஷ்ணகிரி காந்தி ரோட்டில் அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.கிருஷ்ணகிரி,ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, காவேரிப்பட்டினம், வேப்பனப்பள்ளி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, இராயக்கோட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதியில் உள்ள கர்ப்பிணிகள் கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் தான் பிரசவத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மருத்துவமனை வளாகத்திலேயே 18 கோடி மதிப்பிலான 8 அடுக்கு மாடி கொண்ட சிறப்பு மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு கட்டிடம் திறக்கப்பட்டது. இதனால் கூட்ட நெரிசல் குறைந்து அரசு மருத்துவமனைக்கு  கர்ப்பிணிகளும் அதிக அளவில் வரத்தொடங்கினர்.இந்த நிலையில் மருத்துவமனைக்கு  இரண்டாவது குழந்தைக்காக பிரசவத்திற்கு வரும் தாய்மார்களிடம் கட்டாய குடும்ப கட்டுப்பாடு செய்ய சொல்கின்றனர்.

 

குடும்ப கட்டுப்பாடு செய்ய மறுக்கும் கர்ப்பிணிகளை இழிவான வார்த்தைகளால் பேசுவதுடன் அவர்களுக்கு முறையாக சிகிச்சை அளிப்பதில்லை என்றும் புகார்கள் எழுகிறது. மேலும் குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்டால் மட்டுமே இங்கு பிரசவம் பார்க்க முடியும் இல்லையென்றால் நீங்கள் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று புறக்கணிப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் கர்ப்பிணிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி தனியார் மருத்துவமனையை நாடும் நிலை உள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு வரும் தாய்மார்களை அவமரியாதை செயவதால் பெரும்பாலானவர்கள் வெளியில் வட்டிக்கு கடன் பெற்றாவது தனியார் மருத்துவமனைக்கு சென்று விடுகின்றனர். இயலாதவர்கள் வேறு வழியின்றி அந்த மருத்துவமனையிலேயே குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்டே பிரசவம் பார்த்து கொள்கின்றனர். குடும்ப கட்டுப்பாடு செய்ய ஒப்புக்கொள்ளாத பட்சத்தில் அங்கு பிரசவத்திற்காக வருபவர்களை அங்கு இருக்கும் ஊழியர்கள் தகாத வார்த்தைகளால் திட்டுவதாகவும் கூறப்படுகிறது. 

இது குறித்து மருத்துவத்துறை இணை இயக்குநரிடம் புகார் கூறியபோது :- இரண்டு குழந்தைகள் பிறந்தால் குடும்ப கட்டுப்பாடு செய்ய சொல்லி உயரதிகாரிகள் வாய்மொழி உத்தரவிட்டுள்ளார்கள். அதன்படி தான் நாங்கள் இங்கு செயல்படுத்துகிறோம். ஆனால் அரசு மக்களுக்கு தெரியும் படி இரண்டு குழந்தைகள் பெற்று கொண்டால் கட்டாய குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ள வேண்டும் என அரசாணையோ, அல்லது தனிச்சட்டமோ இயற்றினால் மக்களும் அதை ஏற்றுக்கொண்டு எங்களுக்கும் ஒத்துழைப்பார்கள் என்றார். மேலும் குழந்தைகள் பிறந்தால் பெண் குழந்தைக்கு 500ரூபாயும், ஆண் குழந்தைக்கு 1000ரூபாயும் கட்டாயம் கொடுக்க வேண்டும் என தம்பதிகளிடம் மருத்துவர்கள் கட்டாய வசூல் செய்து வருவதாகவும்  புகார் எழுந்துள்ளது.