திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நாளை முதல் 100 நாள் பிரச்சார பயணத்தை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சொந்த ஊரான திருக்குவளையில் இருந்து துவக்குகிறார். இது திமுகவினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது. இதற்கு தமிழகத்தில் உள்ள கட்சிகள் அதிரடியாக தயாராகி வருகின்றன. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். எனவே 2021 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது, இந்நிலையில் அதிமுக, திமுக, பாஜக என பல்வேறு கட்சிகள் தேர்தல் ஆயத்த பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. 2011 சட்டமன்ற தேர்தலை எதிர் கொள்ள ரஜினி கட்சி ஆரம்பிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் கட்சி ஆரம்பிப்பது கானல் நீராகி உள்ளது. 

 

எனவே இந்த முறையும் அதிமுக, திமுகவுக்கே நேரெதிர் போட்டி என்ற சூழல் உருவாகி உள்ளது. கடந்த 25 ஆண்டுகளாக தோல்வியை சந்தித்த திமுக இந்த முறை வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. திமுகவிற்கான வெற்றி வாய்ப்பை உறுதி செய்யும் வகையில் கட்சியில் பல்வேறு அதிரடி மாற்றங்களை அக்கட்சின் தலைமை அதிரடியாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் வரும் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் திமுக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. 

அதன்படி சுமார் 100 நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்ளும் வகையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின், சுற்றுபயணத்தை நாளை முதல் துவக்குகிறார். மறைந்த கருணாநிதி அவர்களின் பிறந்த ஊரான திருக்குவளையில் இருந்து இந்த சுற்றுப்பயணத்தை உதயநிதி ஸ்டாலின் நாளை துவக்குகிறார். நாகை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். வரும் 27 ஆம் தேதி தனது பிறந்தநாளையொட்டி, சென்னை திரும்பி தலைவர் மற்றும் தொண்டர்களை சந்திக்கிறார். இதனைத் தொடர்ந்து, 28 ஆம் தேதி திருச்சியில் தொடங்கி டிசம்பர் 1 ஆம் தேதி வரை பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். உதய நிதியின் இந்த  தேர்தல் சுற்றுப்பயணம் அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.