மாமல்லபுரத்ததை அழகுபடுத்துவதற்கு மட்டும் எவ்வளவு நிதி ஒதுக்கபபட்டது என்பதை குறிப்பிட்டு தெரிவிக்காவிடில் சம்பந்தப்பட்ட மத்திய மாநில  அரசு செயலர்கள் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான மாமல்லபுரத்தை அழகு படுத்துவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில், உயர் நீதிமன்றம், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வினித் கோத்தாரி அமர்வு, மாமல்லபுரத்தை அழகுபடுத்துவதற்கு தேவைப்படும் நிதி  குறித்து ஆய்வு செய்ய தமிழக சுற்றுலா துறை செயலாளர், நிதித்துறை செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் மற்றும் தொல்லியல் துறை இயக்குனர் ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்து உத்தரவிட்டது.

மாமல்லபுரத்தை அழகுபடுத்துவதற்கு தேவைப்படும் நிதி குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவின் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யும்படி மத்திய மாநில அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் வழக்கு  மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மாமல்லபுரம் போன்று 16 சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு 5109 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் மாமல்லபுரத்திற்கு மட்டும் எவ்வளவு நிதி என்று சுட்டிக்காட்டினர். இதற்கு மத்திய அரசு  உரிய பதில் அளிக்காததால் மாமல்லபுரத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை மட்டும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றும், இல்லை என்றால் சம்பந்தப்பட்ட செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர். மேலும், அடுத்த வழக்கு விசாரணையின் போது தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் மற்றும் மத்திய அரசின் கூடுதல் சொலிஸ்டரல் ஜெனரல் வழக்கறிஞர் வழக்கு விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு வழக்கு டிசம்பர் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.