செந்தில் பாலாஜி, தங்க தமிழ்செல்வன், இசக்கி சுப்பையா வரிசையில் டி.டி.வி.தினகரன் கூடாரத்தில் இருந்து மாற்று முகாமுக்கு தாவ புகழேந்தி முடிவெடுத்து விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

கோயம்புத்தூரில் அவர் பேசிய வீடியோவை வெளியிட்டு அமமுகவிலிருந்து புகழேந்தியை கட்சியை விட்டு நீக்க வேண்டுமென்று திட்டமிட்டே ரிலீஸ் செய்ததாக கூறப்படுகிறது. கள்ளக்குறிச்சியை பூர்வீகமாக கொண்டவர் புகழேந்தி. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பே பெங்களூரு சென்று செட்டிலாகி விட்டார். ஜெயலலிதா காலத்தில் அதிமுகவில் அடியெடுத்து வைத்தவர். அதிமுக கர்நாடக பிரதிநிகளான யுவராஜ் உள்ளிட்ட முக்கிய புள்ளிகளை ஓரம் கட்டி விட்டு ஒரு கட்டத்தில் சசிகலாவுக்கு நெருக்கமான விசுவாசியாக மாறிப்போனார். சசிகலாவின் நம்பிக்கை பெற்றவர்களில் இவர் முக்கியமானவர். கர்நாடகாவில் சசிகலாவில் சொத்துக்களை நிர்வகித்து வந்தார். 

கர்நாடகாவை பொறுத்தவரை சசிகலாவுக்கு காரியங்களை சாதித்துக் கொடுத்து வந்தார். பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவுக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்து கொடுத்து வருபவர். பெங்களூருவில் இருப்பதால் சிறையில் சசிகலாவை அடிக்கடி சென்று பார்த்து வருபவர். அதனால் தானோ என்னவோ டி.டி.வி.தினகரன் புகழேந்தியை ஓரம் கட்ட முடிவெடுத்து விட்டதாக கூறப்படுகிறது.   டி.டி.வி.தினகரனின் செயல்பாடுகளை அவ்வப்போது சசிகலாவிடம் புகழேந்தி ஓதி வந்ததாக அமமுக தரப்பு சந்தேகம் கொண்டது. 

புகழேந்தி மூலம் சில தகவல்கள் செல்வதால் அதனை கேட்டு டி.டி.வி.தினகரனை சசிகலா அழைத்து கண்டித்ததாகவும் கூறப்பட்டது. இதனால் ஆரம்பித்தில் இருந்தே நெருக்கமாக இருந்து வந்த புகழேந்தியை ஓரம் கட்ட திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் புகழேந்தி இது குறித்து பேசும்போது, ‘’நான் சசிகலாவிற்கு வேண்டியவன் என்பதால் கட்சியில் இருந்து புறக்கணிக்கப்படுகிறேனா? பழிவாங்கப்படுகின்றேனா? என்ற கேள்வி எனக்குள் எழுகிறது’’ என வெடித்துள்ளார். 

சசிகலாவில் பெங்களூரு விவகாரங்கள் அனைத்தும் அறிந்தவர் புகழேந்தி. ஒருவேளை அவர் அமமுகவில் இருந்து வெளியேறுவதை
சசிகலா விரும்ப மாட்டார். ஆகவே செந்தில் பாலாஜி, இசக்கி சுப்பையா, கலைராஜன், தங்க தமிழ்செல்வன் கட்சியை விட்டு வெளியேறும்போது ஏற்படாத அதிர்ச்சி புகழேந்தி வெளியேறினால் சசிகலாவை பாதிக்கும். ஏற்கெனவே சசிகலா -டி.டி.வி.தினகரன் மீது கோபத்தில் இருப்பதாக கூறப்படும் நிலையில் புகழேந்தி விவகாரம் அவர்களுக்குள் இன்னும் கோபத்தை ஏற்படுத்தலாம் என்கிறார்கள் அமமுகவினர்.