கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் காலகாலமாக பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. 10 முதல் 50 வயதுடைய பெண்கள் 48 நாட்கள் விரதம் இருக்க முடியாது என்பதாலும், மாதவிடாய் காலத்தில் அவர்கள் கோயிலுக்குள் நுழையும்போது கோயிலின் புனிதத் தன்மை பாதிக்கப்படும் என்றும் காரணம் தெரிவித்து கோயில் நிர்வாகத்தால் அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.

இந்த நடை முறையை எதிர்த்து இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கடந்த 2006-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஆர்.எப்.நாரிமன், ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகிய நான்கு பேரும் அளித்துள்ள தீர்ப்பில் ‘பெண்களின் வழிபாட்டு உரிமையை பறிப்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது.

புனிதம், சுத்தம், அழுக்கு போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி தனிப்பட்டவர்களை ஒதுக்குவதை சட்டத்தால் ஏற்க முடியாது. கேரள அரசால் வழிபாட்டுத் தலங்களில் நுழையும் உரிமை குறித்த சட்ட பிரிவு ரத்து செய்யப்படுகின்றன என தெரிவித்தனர். இதையடுத்து பெண்களை சபரிமலைக்கும் அனுமதிக்கும் நடவடிக்கைகளை கேரள அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்த இந்த விவகாரம் குறித்து முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ தனது ட்விட்டர் பக்கத்தில் , சபரிமலை கோயிலின் நூற்றாண்டு பழமையான நடைமுறையில் குறுக்கிடுவதன் மூலம், பிரச்சினைகள் நிறைந்த பெட்டியை உச்சநீதிமன்ற நீதிபதிகள் திறந்திருக்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் உள்ள கோயில்கள், மசூதிகள், குருத்வாராக்கள் ஒவ்வொன்றுக்கும், அந்தந்த மத நம்பிக்கையும், தனிப்பட்ட வழிபாட்டு முறையும் இருக்கிறது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான மசூதிகளில் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

இந்துக்களின் வழிபாட்டு முறைகளில் தலையிடும் உச்சநீதிமன்றம் அதே தைரியத்துடன், மசூதிகளில் பெண்களும் தொழுகை நடத்தலாம் என, தீர்ப்பு வழங்குமா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மசூதிகளில் ஆண்களுடன் பெண்களும் சரிநிகர் சமமாக தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும் உச்ச நீதிமன்றம் உத்தரவிடுமா? அல்லது இந்த தைரியம் குறிப்பிட்டு இந்துக்கள் விஷயத்தில் மட்டும் தானா? என சர்ச்சைக்குரிய வகையில் மார்கண்டே கட்ஜு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.