நடிகர் ரஜினிகந்த் கட்சி ஆரம்பித்தால் டிடிவி தினகரனுக்கு நேர்ந்த அதே கதிதான் ரஜினிக்கும் நேரும் என அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக சாடியுள்ளார்.

வி.ஜி.பி. உலக தமிழ் சங்கம் சார்பில் அதன் தலைவர் வி.ஜி.பி. சந்தோசம் தலைமையில் தைவான் நாட்டிற்கு திருவள்ளுவர் சிலையை வழியனுப்பும் நிகழ்ச்சி, அடையாறு எம்.ஜி.ஆர்.ஜானகி கல்லூரியில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் கடம்பூர் ராஜு ஆகியோர் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்தனர், அப்போது  முதலமைச்சரின்  வெளிநாட்டு பயணத்தை  ஸ்டாலின் விமர்சனம் செய்வது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், அதற்கு பதில் அளித்த அவர். ஸ்டாலினால் முதலமைச்சராக முடியாத காரணத்தால் வயிற்று எரிச்சலில் விமர்சனம் செய்வதாக கூறினார்.

திமுக 200 தொகுதிகளில் வெற்றிபெறும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்ததற்கு பதிலளித்த அவர் ஸ்டாலின் 20 தொகுதியை பிடிப்பதே கடினம் அதிமுக மட்டுமே 200 தொகுதிகளையும் பெறக்கூடிய வல்லமை உடைய கட்சி என கூறினார். நடிகர் ரஜினிகாந்த் மார்ச் மாதத்தில் கட்சி துவங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது பற்றி கருத்து தெரிவித்த  அவர், ரஜினி  கட்சி வேண்டுமானால்  ஆரம்பிக்கலாம் ஆனால் அவரால் வெற்றி பெறும் அளவிற்கு வாக்கு  பெறமுடியாது என கூறினார் .  2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுகாவால்  மட்டுமே 48 சதவீதம் வரை வாக்குகளை பெற முடியும்  என்ற அவர். புதிய கட்சி தொடங்கி 5% பெற்ற தினகரனுக்கு நேர்ந்த கதிதான் ரஜினிக்கும் நடக்கும் என்றார்.

பொருளாதார மந்த நிலைக்கு ஜிஎஸ்டி மட்டுமே காரணம் என்று கூறுவது தவறானது.  உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையே அதற்கு காரணம்   அதனை சரிசெய்ய வருகின்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்தப்படும் என்றார்.வெளிநாட்டு முதலீடுகள் வந்தால் தமிழக அரசுக்கு  விழா எடுப்பதாக ஸ்டாலின் தெரிவித்தது குறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், முதலமைச்சர் தமிழகத்திற்கு முதலீடுகளை கொண்டு வருவார் கொண்டு வந்த பின்பு ஸ்டாலின் அவரது கருத்தில் பின்வாங்கக் கூடாது என தெரிவித்தார். 

நாம் இந்து என்ற உணர்வு ஒவ்வொரு இந்துக்குள்ளும் இருக்க வேண்டும் என்று அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிந்திரநாத் பேசி வருவது குறித்து பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார் ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டது அதிமுக விநாயகர் ஊர்வலத்தில் ரவிந்திரநாத் தெரிவித்த கருத்து அவரது தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம் அது அதிமுகவின் கருத்தல்ல என கூறினார்.