நடிகர் ரஜினிகாந்த், டிசம்பர் 31 அன்று கட்சி தொடங்கும் தேதியை அறிவிப்பேன் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், ‘நான் கட்சி ஆரம்பித்து, அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருந்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதை அறிவிக்கும் போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும் தான் தெரியும். இந்த முடிவு ரஜினி மக்கள் மன்றத்தினருக்கும் நான் கட்சி ஆரம்பிப்பேன் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும் மக்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும். என்னை மன்னியுங்கள்’ என்று அறிவித்து கட்சி தொடங்குவதற்கு முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினிகாந்த்.


இந்நிலையில் கோவில்பட்டியில் தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ரஜினி தொடர்பாக அவர் கருத்து தெரிவித்தார். “நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதும் ‌தொடங்காமல் இருப்பதும் அவருடைய விருப்பம். பொதுவாக நடிகர்கள் யார் கட்சி தொடங்கினாலும் அதனால் அதிமுகவுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. தேர்தலில் யாருக்கு வாய்ஸ் கொடுக்க வேண்டும் என்பது ரஜினியின் சொந்த விருப்பம். அதற்காக அவரை கட்டாயப்படுத்த முடியாது. அதிமுகவுக்கு ஆதரவாக தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் வாய்ஸ் கொடுத்தால் நாங்கள் ஏற்றுக்கொள்வோம்” என்று கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.