அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘’இரண்டு அரசியல் கட்சிகளும் மாறி மாறி 60 ஆண்டுகளாக ஆண்டு விட்டன. மாற்று அரசியல் கட்சி வரவேண்டும். அதிலும் வெற்றிபெறக் கூடியவர் வரவேண்டும் என நீங்கள் நினைத்தால் இப்போதைய நிலையில் அது ரஜினியாகத்தான் இருக்க முடியும்.  இங்கே அப்துல் கலாமே வந்தாலும் வெற்றி பெற முடியாது. 

ஏனென்றால் இது தேர்தல் அரசியல். இங்கே வெற்றிபெற வேண்டும் என்றால் வெகுஜன மத்தியில் பாட்டாளி வர்க்கத்திடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய நபராக இருக்க வேண்டும். 1957ல் திமுக தேர்தலை சந்தித்த போது வெறும் 15 சதவிகித வாக்குகளைக் கூட பெறவில்லை. ஆனால் அதே திமுக 1967ல் தேர்தலை சந்தித்த போது 52 சதவிகித வாக்குகளை பெற்று ஆட்சியை கைப்பற்றியது.  எதனால் இந்த வெற்றி சாத்தியமானது என்றால், இடையில் இந்தி எதிர்ப்பு, போராட்டம் என திமுக பிரபலமானாலும், எம்.ஜி.ஆர் என்கிற சக்தி கிடைத்தது. வெகுஜன மக்களிடம் எம்.ஜி.ஆர் பெற்றிருந்த புகழ் திமுகவை வெற்றி பெறச்செய்தது. 

காங்கிரஸ் அடியோடு ஒழிந்து விட்டது. ஆக, கொள்கை, கோட்பாடு லட்சியம் இதெல்லாம் வெற்றிபெற தேவையில்லை. மக்களின் மனதிற்கு நெருங்கியவராக இருக்க வேண்டும். அந்த நெருக்கமான நபர்கள் எப்படி அரசியலை முன்னெடுக்கிறார்களோ அதை பொறுத்து தான் வெற்றி அமையும்.  அப்படிப்பார்த்தால் இன்றைய நிலையில் ரஜினி பாட்டாளி மக்களிடம் மிகப்பெரிய பிரபலமாக இருக்கிறார். அதிகபட்சமாக அவர்களின் மனதுக்கு நெருக்கமான நபராக இருக்கிறார்.  ஆகையால் திமுக, அதிமுக வேட்பாளர்களை விட முதல்வர் வேட்பாளராக ரஜினி மிகச்சிறந்த தேர்வு. 

பொதுவாக பேரூராட்சி, நகராட்சி, கிராமம் தோறும் அதிமுக - திமுகவுக்கு மட்டுமே கட்சி கட்டமைப்பு இருக்கிறது. கட்சியின் கட்டமைப்பை உருவாக்க ஆதரவாளர்கள் தேவை.  அந்த வகையில் ரஜினி நினைத்தால் ஒரே நாளில் இந்த கட்டமைப்பை உருவாக்க முடியும். மிகத் தெளிவாக தனது அரசியல் கொள்கையை ரஜினி ஏற்கெனவே அறிவித்து விட்டார். மதம் சாதியை வைத்து அரசியல் நடத்தி வருபவர்களுக்கு மத்தியில் ஆன்மிக அரசியல் என்பதே மாற்று தான். ஆன்மீக அரசியலை முன்னெடுப்பதாக சொல்வதற்கே தனி துணிச்சல் வேண்டும். 

இந்த ஒரு கொள்கைக்காகவே மக்கள் ரஜினியை வரவேற்க வேண்டும்.  மதச்சார்பின்மை, அல்லது கடவுள் நம்பிக்கையற்ற கட்சியாக காட்டிக் கொள்ளும் திமுக, இஸ்லாமியர்- கிறிஸ்தவர்களை விமர்சனம் செய்வது கிடையாது. அவர்கள் செய்வதெல்லாம் இந்து மத எதிர்ப்பு. திமுகவை பொறுத்தவரை 24 மணி நேரமும் இந்து எதிர்ப்பை விதைப்பது தான், அவர்களின் மத, ஆன்மீக நம்பிக்கையை காயப்படுத்திக் கொண்டே இருக்கும்.  ஆகையால் 10 சதவிகித மாற்று மதத்தினரின் வாக்கு கிடைக்கும் என திமுக நினைக்கிறது. அது உண்மையான மதச்சார்பின்மையாக இருக்க முடியாது. 

ரஜினி சொல்லும் ஆன்மிக அரசியல் முற்றிலும் ஏற்றுக்கொள்ள வேண்டியது. நீ எந்த மதத்தினராக வேண்டுமானாலும் இருந்து விட்டுப்போ.. ஆனால் கடவுளுக்கு மதம் கிடையாது. எல்லோருக்கும் ஆன்மீகம் என்பது ஒன்று தான். ஆக ஆன்மீகம் எல்லோரையும் இணைக்கும். மதன் என்று சொல்லும் போது மற்றவர்களை பிரிக்க ஆரம்பிக்கும். திமுக நடத்துவது இந்துமத எதிர்ப்பு.. ஆனால் ரஜினி சொல்வது அனைத்து மத ஆன்மீக நம்பிக்கையும் மதிக்கப்படும் எனச் சொல்கிறார். இந்தத் தன்மை மிக முக்கியமானது.

இதுவரைக்கும் திராவிடக் கட்சிகள் முன் வைக்காத தன்மையை ரஜினி முன் வைக்கிறார். திரைத்துறையில் ரஜினிக்கு இனி வாய்ப்பில்லை. அவரது படங்கள் ஓடாது. அதனால் தான் அவர் அரசியலுக்கு சம்பாதிக்க வருகிறார் என திமுகவினர் கிளப்பி வருகிறார்கள்.  அவர் நினைத்தால் பல விளம்பரப்படங்களில் நடித்து கோடி கோடியாய் சம்பாதிக்கலாம். ஆனால் அவர் எந்த விளம்பரப்படத்திலும் நடிக்கவில்லை. ரஜினியை தலைவராக ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் இன்னும் 25 ஆண்டுகளுக்கு திமுகவும் -அதிமுகவும் மாறி மாறி தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும்’’ எனத் தெரிவித்துள்ளார்.