பெரியார் சிலை அவமதிப்புகளை தடுக்க, தொடக்கத்திலேயே தமிழக அரசு நடவடிக்கை எடுத்து இருந்தால், இதுபோன்ற செயல்கள் தொடர்ந்து நடந்து இருக்காது என்று திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு கூறியுள்ளார்.

திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் ஊராட்சியில் பெரியார் நினைவு சமத்துவபுரம் உள்ளது. திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையையொட்டி இந்தச் சமத்துவபுரத்தின் நுழைவு வாயிலில் பெரியாரின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பெரியார் சிலைக்கு சமூக விரோதிகள் காவிச் சாயம் பூசி, காலணி மாலை அணிவித்திருப்பது இன்று காலை தெரியவந்தது. இதனால், பதற்றமான சூழல் நிலவியது. தகவலறிந்து இனாம்குளத்தூர் மணிகண்டம் காவல் துறையினர் விரைந்து வந்து காலணி மாலையை அகற்றியதுடன், காவிச் சாயத்தைத் துடைத்து, சிலையைத் தூய்மைப்படுத்தினர். பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதற்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அவமதிக்கப்பட்ட பெரியார் சிலைக்கு, திமுக முதன்மைச் செயலாளர் நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர்;- ஒரு சிலர் கட்சி வளர்ப்பதாக எண்ணி, திராவிட இயக்க தலைவர்கள் மீது பொய்யான பிரச்சாரம் செய்து, பெரியார் சிலையை சேதப்படுத்துவதுவதாக கூறினார். 

பெரியார் சிலை அவமதிப்புகளை தடுக்க, தொடக்கத்திலேயே தமிழக அரசு நடவடிக்கை எடுத்து இருந்தால், இதுபோன்ற செயல்கள் தொடர்ந்து நடந்து இருக்காது என்று கூறினார். திமுக ஆட்சியில் இருக்கும் போது, முடிந்தால் பெரியாரை அவர்கள் தொட்டு பார்க்கட்டும் என்று கே.என்.நேரு சவால் விடுத்தார்.