if police not acted as their nature then i will go to court says ttv dinakaran
காவல் துறை சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நான் நீதிமன்றத்துக்கு போவேன் என்று கூறினார் டிடிவி தினகரன்.
ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடக்கிறது. அங்கே கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக புகார்கள் கூறப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தன் ஆதரவாளர்களைக் காரணமின்றி போலீஸார் கைது செய்வதாகக் குற்றச்சாட்டு கூறும் தினகரன், இன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லகானியை சந்தித்து பேசினார். அதன் பின்னர், டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர்,
எனது ஆதரவாளர்களை காரணமின்றி கைது செய்துள்ளனர். அதுகுறித்து தேர்தல் ஆணையரிடம் புகார் அளிக்க வந்தேன். ஆர்.கே.நகரில் எனது ஆதரவாளர்களை காரணமின்றி காவல்துறையினர் கைது செய்கின்றனர். பயங்கரவாதிகளை பிடிப்பது போல கைது செய்கின்றனர். நக்சலைட் போல நள்ளிரவில் கைது செய்வதா? காவல்துறையினர் நேர்மையாக செயல்படவில்லை. இதற்கெல்லாம் பயப்படுகிற ஆட்கள் நாங்க இல்லை.
உண்மையாகவே தேர்தல் சரியாக நடக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். ஆனால், விரக்தியின் உச்சியில் உள்ளனர் ஆளும் கட்சியினர். தமிழக காவல்துறை நியாயமாக நடந்துகொள்ள வேண்டும், இல்லையெனில் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுப்பேன். அடுத்த தலைவரை ஆர்.கே.நகர் தொகுதிமக்கள் உருவாக்க இருக்கிறார்கள். எனவே, ஆர்.கே நகர் தேர்தலில் நிச்சயம் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று கூறினார் தினகரன்.
தொடர்ந்து, குமரியை தேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். குமரி மாவட்டத்தில் புயல் நிவாரணப் பணிகளை அரசு முடுக்கிவிடவும் இல்லை, முடிக்கவும் இல்லை என்று புகார் தெரிவித்தார்.
