என்.பி.ஆரை தமிழகத்தில் நடத்தத் தன்னிச்சையாக அதிமுக அரசு அனுமதித்தால், ஒத்துழையாமை இயக்கம் நடத்தும் கட்டாயத்துக்கு திமுக தள்ளப்படும் என்று தமிழக அரசுக்கு திமுக எச்சரித்துள்ளது.
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்றது. அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சிஏஏ-க்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் நடத்தப்படும் உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அந்தத் தீர்மானத்தில், ‘அரசியல் சட்டத்தையும், நாட்டின் பன்முகத் தன்மையையும் பாதுகாத்திடும் பொருட்டு - சிறுபான்மையின மக்கள், இந்தியாவில் வாழும் ஈழத் தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து மக்களின் அடிப்படை உரிமைகளை நிலைநாட்டும் நோக்கில், தமிழகம் முழுவதும் தன்னெழுச்சியாக நடைபெறும் அறவழிப் போராட்டங்கள், மத்திய பா.ஜ.க அரசையும், பிற்போக்கான இந்த சட்டத்திற்கு ஆதரவளித்து வாக்களித்த அதிமுக, பாமக போன்ற கட்சிகளையும் பெரிதும் மிரள வைத்துள்ளது.


ஜனநாயக வழியில் அமைதியாக நடக்கும் போராட்டத்தைக் காணச் சகிக்காத அதிமுக அரசு, வெகு மக்களுக்கு எதிராகக் காவல்துறையை ஏவி விட்டு, சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற அமைதியான போராட்டத்தில் தடியடி நடத்தியிருப்பதற்கு, இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறது.
அதிமுக அரசு தமிழக மக்களின் ஏகோபித்த உணர்வுக்கு மதிப்பளிக்காமல் - என்.ஆர்.சிக்கு வழி திறக்கும் என்.பி.ஆரை தமிழகத்தில் நடத்தத் தன்னிச்சையாக அனுமதித்தால், அனைத்துக் கட்சிகளுடன் கலந்து ஆலோசித்து, என்.பி.ஆருக்கு எதிராக மக்களைத் திரட்டி, அறிஞர் அண்ணா காட்டிய காந்திய அற வழியில், மகத்தான ஒத்துழையாமை இயக்கம் ஒன்றை, திமுக நடத்திட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுவிடும் என்றும் இந்தக் கூட்டம் எச்சரிக்கை செய்ய விரும்புகிறது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேபோல க்ரூப்-4 தேர்வில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக கண்டனம், ஹைட்ரோ கார்பன் திட்டங்களையும் ரத்து செய்யும் வகையில் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டல சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் உள்பட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.