இந்தியாவிடமிருந்து பாகிஸ்தான் பிரிந்து சென்ற முதல் அந்நாடு நம்மை எதிரியாகத்தான் பார்த்து வருகிறது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அடிக்கடி எல்லை பகுதியில் தாக்குதல் நடத்தி வருகிறது. 

மேலும் தீவிரவாதிகளை நம் நாட்டுக்குள் ஊடுருவ செய்ய பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு எல்லாம் நம் ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இருப்பினும் கடந்த பிப்ரவரியில் நடந்த புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மேலும் விரிசல் கண்டது.


இந்நிலையில், இந்திய ராணுவத்தின் உதவி தேவைப்பட்டால் அனுப்புவோம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு தகவல் தெரிவித்துள்ளார் நமது பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். 

அரியானாவில் வரும் 21ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி பா.ஜ.க. சார்பில் கர்னாலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ராஜ்நாத் சிங் பேசுகையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு நான் ஒரு யோசனை தெரிவிக்க விரும்புகிறேன். 

உண்மையிலேயே நீங்கள் தீவிரவாதத்துக்கு எதிரான போராட நினைத்தால், உங்களுக்கு உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம். உங்களுக்கு எங்களது ராணுவம் வேண்டுமா, உங்கள் உதவிக்காக நாங்கள் அனுப்புவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.