உக்ரைனுக்கும்- ரஷ்யாவிற்கும் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் தமிழக மாணவர் உக்ரைன் ராணுவத்தில் இணைந்துள்ள சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் நாட்டிற்கு எதிராக கடந்த 14 தினங்களுக்கு மேலாக ரஷ்யா ராணுவம் போரிட்டு வருகிறது. இதில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரை 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் ரஷ்யாவிற்கு எதிராக போரிட யார் வேண்டும் என்றாலும் உக்ரைன் வரலாம் என உக்ரைன் அரசு அறிவித்திருந்தது. மேலும் போரிட விரும்பும் சிறையில் உள்ள கைதிகளும் விடுவிக்கப்படுவார்கள் என உக்ரைன் அரசு கூறியிருருந்தது. இதனையடுத்து ஏராளமானோர் அந்நாட்டின் ராணுவத்துக்கு உட்பட்ட துணை ராணுவப் படைகளில் இணைந்து பணியாற்றி வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தின் , கோவை துடியலூர் அருகேயுள்ள சுப்பிரமணியம்பாளையத்தைச் சேர்ந்த சாய்நிகேஷ் என்ற மாணவரும் உக்ரைன் துணை ராணுவத்தில் இணைந்து பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது.

மாணவர்கள் படிப்பிற்கு ஏற்பாடு
இதனையடுத்து மாணவரின் குடும்பத்தினரிடம் மத்திய , மாநில உளவுத்துறையினர் கோவையில் உள்ள அவரது குடும்பத்தினரிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது மாணவர் சாய் நிகேஷ் இந்திய ராணுவத்தில் சேர விரும்பியதும் , ஆனால் அதற்கேற்ப உயரம் இல்லாததால் சேர முடியவில்லை என்பதும் தெரியவந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பியுள்ள மாணவர்களுக்கு கல்வி கற்பதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் 30 பேர் உக்ரைனில் படிக்கும் நிலையில் 13 பேர் மட்டுமே இது வரை ஊருக்கு திரும்பியுள்ளதாக கூறினார். உக்ரைனில் இருந்து மருத்துவ படிப்பினை பாதியில் விட்டு விட்டு வந்திருக்கின்ற மாணவர்கள் மீண்டும் அங்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு இருப்பதாகவும் கூறினார். எனவே அந்த மாணவர்கள் இந்தியாவில் படிக்க வைக்க வாய்ப்பு இருக்கின்றதா என ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இந்தியாவில் மாணவர்களை சேர்க்க இடம் இல்லை எனில் வேறு நாட்டில் படிக்க வைக்க முடியுமா என்பதையும் ஆராய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இஸ்லாமிய மாணவராக இருந்திருந்தால்?
மேலும் கோவை மாணவர் சாய்நிகேஷ் உக்ரைன் இராணுவத்தில் சேர்ந்து இருப்பது அபாயகரமானது என தெரிவித்த கார்த்தி சிதம்பரம், கோவை மாணவர் சேர்ந்து இருப்பதை போல, ஒரு இஸ்லாமிய மாணவர் வேறு நாட்டு ராணுவத்தில் சேர்ந்து இருந்தால் இந்நேரம் ஜிகாதி என்று சொல்லி இருப்பார்கள் என கூறினார். எனவே உக்ரைன் ஒரு கிறிஸ்தவ வெள்ளைக்கார நாடு எனவும் எனவே அதன் மீது ஒரு பார்வையும் இஸ்லாமிய நாடுகள் மீது மற்றொரு பார்வையும் உள்ளதாக கூறினார். எனவே தமிழக மாணவர் சாய்நிகேஷ் உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்து போரிடுவது ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
