மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு மீண்டும் வாய்ப்பு தராதது மிகுந்த வருத்தமளிப்பதாக அதிமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் விரக்தியை வெளிப்படுத்தி உள்ளார். 

மாநிலங்களவைக்கு ஜெயலலிதா இருந்தபோது மூன்று முறை எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இந்த முறையும் தனக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வேண்டும் என அதிமுக தலைமையிடம் கேட்டு வந்தார். ஆனால், தலைமை அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை. இந்நிலையில், நேற்று மாநிலங்களவையில் நடைபெற்ற பிரிவு உபச்சார நிகழ்ட்டியின் போது ஜெயலலிதாவை நினைத்து கண்ணீர் வடித்தார். நேற்றுடன் அவரது பதவி காலம் முடிந்த நிலையில், சென்னை திரும்பிய அவர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக ஆட்சியின் செயல்பாடுகளுக்கு மக்கள் பதில் அளிப்பார்கள். இது அம்மா அவர்களின் ஆட்சி. அவருக்கு கிடைத்த மதிப்பால் எம்.எல்.ஏக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆட்சி உருவானது. ஆகையால் இது ஜெயலலிதா அவர்களின் ஆட்சி. அவர் இல்லாத நிலையில் அதிமுக ஆட்சிக்கு அடுத்து மக்கள் பதில் அளிப்பார்கள்.  

மாநிலங்களவை உறுப்பினராக மீண்டும் வாய்ப்பு தராதது வருத்தமாக உள்ளது.  மக்களவை தேர்தலில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்தேன். தென் சென்னை தொகுதி கிடைக்கும் என எதிர்பார்த்தேன். கிடைக்கவில்லை. ஒற்றை தலைமை இரட்டை தலைமையில் சாதக பாதகங்கள் இருக்கின்றன. திமுகவையும் தொடர்ந்து விமர்சித்து வந்துள்ளேன். 

இப்போது தான் மாநில அரசுக்கு திரும்பி வந்துள்ளேன். தொடர்ந்து எனது பதிவு செய்தேன். திமுகவை எங்கு விமர்சிக்க வேண்டுமோ அங்கு கண்டிப்பாக விமர்சிப்பேன். அம்மா அவர்கள் இருந்திருந்தால் என்கிற ஏக்கம் அனைவரிடமும் உள்ளது. அது எனக்கும், உள்ளது’’ என அவர் தெரிவித்தார்.