கந்தசஷ்டி கவசத்தையும் இந்து கடவுள் முருகனையும் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் திட்டமிட்டே மீண்டும் மீண்டும் ஆபாசமாக பேசி இழிவுபடுத்திவரும் கறுப்பர் கூட்டம் சுரேந்திரனின் கதி, இந்நேரம் ஜெயலலிதா இருந்திருந்தால் என்னவாகியிருக்கும்..? .

மிகச்சிறந்த ஆளுமைகளின் வெற்றிடத்தை, மக்களுக்கு காலம் புரியவைக்கும். அப்படி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையும் அவரது துணிச்சலான அதிரடியான நடவடிக்கைகளையும் நினைத்து பார்க்கும் தருணமாக இது அமைந்துள்ளது. ஜெயலலிதாவின் அதிரடியான நடவடிக்கைகள், சர்வாதிகாரி என்ற பெயரையும் கடும் விமர்சனங்களையும் ஜெயலலிதா மீது ஏற்படுத்தியிருக்கின்றன. ஆனால் அதுபோன்ற அதிரடி நடவடிக்கைகள் அவசியம் தான் என்பதை, கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் போன்ற ஆட்கள் அவ்வப்போது உணர்த்தி கொண்டிருக்கின்றனர்.

மூடநம்பிக்கைகளை எதிர்ப்பதிலும், பகுத்தறிவை புகட்டுவதிலும் எந்த தவறுமில்லை. ஆனால் அதை ஒரு மதத்துடன் சுருக்கிக்கொள்வதும், இந்து மதத்தை மட்டுமே டார்கெட் செய்து இழிவுபடுத்துவதும் தான் பிரச்னை. மூடநம்பிக்கைக்கு எதிராக குரல் கொடுப்பதாக கூறிக்கொள்பவர்கள், இந்து மத நம்பிக்கைகளை மட்டும் சீண்டுகின்றனர் என்ற குற்றச்சாட்டு இருந்துவருகிறது. அந்தவகையில், கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல், இந்து மத நம்பிக்கைகளையும் கடவுள்களையும் இழிவுபடுத்துவதற்காகவே தொடங்கப்பட்டு, அதையே முழு நேர வேலையாக செய்துவருகிறது.

இந்நிலையில், கந்தசஷ்டி கவசத்தையும் இந்து கடவுள் முருகனையும் மிகவும் ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தி கொச்சைப்படுத்தி சுரேந்திரன் என்பவர் பேசிய வீடியோ கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டிருந்தது. அந்த வீடியோவை பார்த்து, அதில் சுரேந்திரன் பேசியதை கேட்ட மாற்று மதத்தினரே எதிர்ப்பு தெரிவிக்கும் அளவிற்கு, தரங்கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி பேசியிருந்தார் அந்த சுரேந்திரன் என்ற நபர். 

இந்துக்களின் கோபத்திற்கு மட்டுமல்லாது, மத நல்லிணக்கத்தை விரும்பும் அனைவரின் கோபத்திற்கும் ஆளானது கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை நடத்தும் கூட்டம்; குறிப்பாக சுரேந்திரன். மத நல்லிணக்கத்தை விரும்பும் எந்த மதத்தினரும், மாற்று மதம் அவமதிக்கப்படுவதை விரும்பமாட்டார்கள். கந்தசஷ்டி கவசத்தை கேரளாவில் இஸ்லாமியர்களும், பல கிறிஸ்தவர்களும் கேட்கின்றனர் என்பது நிதர்சனமான உண்மை. அப்படியிருக்கையில், கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மாதிரியான விஷக்கிருமிகள், விஷத்தை பரப்ப முயற்சிக்கின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக பாஜக சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் கொடுக்கப்பட்ட புகாரின் விளைவாக, சம்மந்தப்பட்ட சுரேந்திரன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளது காவல்துறை. 

ஏற்கனவே அத்துமீறிய, ஆபாச வார்த்தைகளை பயன்படுத்திய சுரேந்திரன், புதுச்சேரி அரியாங்குப்பம் காவல்நிலையத்தில் சரணடையும்போதும், மறுபடியும் மிகத்திமிராக கெட்ட வார்த்தைகளில் பேசினார். சுரேந்திரன் மறுபடியும் கெட்ட வார்த்தையில் பேசியது, வேண்டுமென்றே உள்நோக்கத்துடன், இந்து மதத்தின் மீது நடத்தும் தாக்குதல் தான் அது. கொஞ்சம் கூட நாகரிகமே இல்லாமல், கிட்டத்தட்ட சைக்கோ மாதிரி பேசுகிறார் சுரேந்திரன்.

கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையையும் அவர்கள் வணங்கும் கடவுள்களையும், புராணங்களையும் இழிவாக பேசும் தைரியம் இதுபோன்ற நபர்களுக்கு எப்படி வந்தது? எவ்வளவு தரங்கெட்டு பேசினாலும் தப்பித்துக்கொள்ளலாம் என்ற தைரியம் தான் இதற்கு காரணம். ”புள்ளப்பூச்சிக்குலாம் கொடுக்கு முளைத்துவிட்டது” என்று சொல்வார்கள். அந்தவகையில், இந்த மாதிரி புள்ளப்பூச்சிக்குலாம் எப்படி கொடுக்கு முளைத்தது? ஜெயலலிதா மாதிரியான அதிரடியான நடவடிக்கைகள் இப்போது எடுக்கப்படாது என்ற தைரியம் தான்.

இந்நேரம் ஜெயலலிதா இருந்திருந்தால், சுரேந்திரன் பேசிய பேச்சிற்கு நடப்பதே வேறு. கறுப்பர் கூட்டம் சுரேந்திரன், கந்தசஷ்டியை இழிவாக பேசிய விவகாரத்தில், இந்து மதத்தின் மீதான தாக்குதலை கடந்து, மற்றொரு விஷயமும் இருக்கிறது. வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பினரும் பார்க்கக்கூடிய யூடியூப் சேனலில் பேசும்போது, நாகரிகமாக பேச வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் பேசியிருக்கிறார் சுரேந்திரன். 

ஜெயலலிதா இருக்கும்போது பொட்டிப்பாம்பாய் அடங்கி கிடந்தவர்கள், இப்போது அத்துமீறி கூக்குரலிடுகின்றனர். ஜெயலலிதா ஒரு பக்திமான். இந்நேரம் அவர் இருந்திருந்தால், சுரேந்திரன் மீண்டும் இதுமாதிரி பேச நினக்காத அளவிற்கு நடவடிக்கை இருந்திருக்கும். மேலும் அவரது கெரியரே காலியாகியிருக்கும். முருகனை பற்றியும் கந்தசஷ்டி கவசத்தையும் இழிவாக பேசியதற்காக மட்டுமல்ல; ஜெயலலிதாவிற்கு கெட்ட வார்த்தை பேசினாலோ ஆபாசமாக பேசினாலோ சுத்தமாக பிடிக்காது என்பது அவருடன் பழகியவர்களுக்கு தெரிந்த விஷயம். அந்தவகையில், காதில் கேட்க முடியாத அளவிற்கு, கோடிக்கணக்கான இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் இழிவாக பேசிய சுரேந்திரனின் கதி என்னவென்று தெரிந்திருக்கும் என்று ஜெயலலிதாவை நினைவுகூருகின்றனர் பலரும். 

ஜெயலலிதா இருந்திருந்தால் கறுப்பர் கூட்டம், வெள்ளையர் கூட்டம் என்று தடி எடுத்தவன்லாம் தண்டல்காரன் என்ற நிலை தமிழ்நாட்டில் உருவாகியிருக்காது.