தமிழக பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு பயன் தரும் சட்டங்கள் ஆகும். ஒரு கும்பல் மட்டுமே இந்தச் சட்டங்களை எதிர்த்து வருகிறது. கமல்ஹாசனை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூட்டணிக்கு அழைத்துள்ளார். நான் வீணாக போய்விட்டேன், நீயும் என்னோடு வா என்பது போலவும், தண்ணீரில் மூழ்கிறவன் நம்மையும் பிடித்து இழுப்பது போலவும் இது உள்ளது.


முதலில் கே.எஸ். அழகிரிக்கு திமுகவில் இடம் கொடுப்பார்களா என்ற சந்தேகம் வந்துவிட்டது. புதுச்சேரியில் ஜெகத்ரட்சகனை  முதல்வர் வேட்பாளராக திமுக அறிவித்துள்ளது. ஒரு கட்சி இப்படி அறிவித்த பிறகு தமிழகத்தில் மட்டும் நாங்கள் கூட்டணி என்று எப்படி சொல்ல முடியும்? அநேகமாக திமுக-காங்கிரஸ் கூட்டணி உறவை முறிப்பதற்கான முன்னோட்டம் தான் இது. கூட்டணியை முறித்து கொண்டால் அது நாட்டுக்கு மிகவும் நல்லது.
சசிகலா தண்டனை காலம் முழுமையாக முடிந்த பிறகு வெளியே வருகிறார். ஆனால் பிற கட்சி தலைவர்கள் சசிகலா வருவதை சிங்கம், புலி, கரடி கூண்டில் இருந்து தப்பித்து வெளியே வருவது போன்ற சித்திரத்தை உருவாக்குகிறார்கள். ஜெயலலிதா மீது மிகுந்த விசுவாசம் கொண்டவர் சசிகலா. பின்னணியில் ஆயிரம் இருந்தாலும் ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் இடையே இருந்த நட்பையும் விசுவாசம் ஈடுசெய்ய முடியாத சிறப்பானது. அதிமுக என்ற கட்சி ஜெயலலிதா நினைவாக உள்ள கட்சியாகும். இரட்டை இலை சின்னம் ஜெயலலிதா நினைவாக உள்ள சின்னமாகும்.


அதிமுக என்ற கட்சிக்கும் இரட்டை இலை சின்னத்துக்கும் யார் துரோகம் செய்ய நினைத்தாலும் அது மறைமுகமாக ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகமாகும். எனக்கு தெரிந்த இந்த வி‌‌ஷயம் சசிகலாவுக்குத் தெரியாதா? சசிகலா எதுவும் செய்யமாட்டார்.” என்று இல.கணேசன்  தெரிவித்தார்.