If it had been Jayalalithaa would have happened
கருணாநிதிக்கு அடுத்து ஜெயலலிதாவின் அரசியல் எதிரிகளில் மிக முக்கியமானவர் காட்பாடி துரைமுருகன்.
எம்.ஜி.ஆரின் அன்பைப் பெற்ற துரைமுருகன், ஆரம்பம் முதல் இன்றுவரை கருணாநிதியின் விசுவாசியாக உள்ளார். நக்கல், நையாண்டி, எகத்தாளத்துக்கு பெயர்போனவர் துரைமுருகன். கருணாநிதிக்கு ஜெயலலிதா முக்கிய எதிரியானதற்குக் காரணமே அரசியல் காழ்ப்புணர்ச்சி என்பதைவிட, அவர் தனிப்பட்ட முறையில் ஜெயலலிதா மீது பிரயோகித்த கடினமான சொற்களே காரணம்.

கருணாநிதியின் அதே பாணியைத்தான் துரைமுருகனும் பின்பற்றியதால், துரைமுருகனை ஜெயலலிதாவுக்கு அறவே பிடிக்காது என்பார்கள். மேலும், சட்டமன்ற வரலாற்றில், சேலை உருவப்பட்ட சம்பவத்தில், ஜெயலலிதா மற்றும் துரைமுருகன் இடையேதான் அந்த மோதலும் ஏற்பட்டது. இப்படி, ஜெயலலிதாவுக்கும் துரைமுருகனுக்கும் ஏழாம் பொறுத்தம் என்பது ஊர், உலகம் அறிந்த விஷயம் ஆகும்.

இதுபோன்ற காரணங்களால்தான், சொந்த கட்சி துரோகிகள் மட்டுமின்றி, அரசியல் எதிரிகளின் பெயரைக்கூட தேவையில்லாமல் தனது ஜெயா டிவியில் வராமல் பார்த்துக்கொண்டார். தவறி அதுபோன்ற செய்திகள் ஜெயா டிவியில் இடம்பெற்றுவிட்டால், பல பேரின் வேலைகள் பறிபோனது தனிக்கதையாகும்.

ஜெயலலிதா மறைந்தபின் எல்லாம் தலைகீழாய் மாறிப்போனது. ஓபிஎஸ்-க்கு ஆதரவாக ஸ்டாலின் குரல்கொடுத்ததில் தொடங்கி, ஆளுநரின் ஆய்வுக்கு திமுக எதிர்ப்பு வரை, பல மாற்றங்கள் நடந்தேறி வருகிறது. ஆனால், ஜெயலலிதாவின் ”உண்மை” விசுவாசிகளுக்கு இதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை. எங்கள் அம்மாவுக்கு பிடிக்காத துரைமுருகனின் பேட்டியை எப்படி அவர் பெயர் தாங்கிய சேனலில் ஒளிபரப்பலாம் என்ற ஆதங்கம்தான்.
.jpg)
ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை, அவர் மற்றும் அவர் கட்சி சார்ந்த விஷயங்களை மட்டுமே தாங்கி வந்த ஜெயா டிவி, தற்போது அரசியல் காரணங்களுக்காக அல்லது சுயலாபத்திற்காக இப்படி எதிர்க்கட்சி துரைமுருகனின் பேட்டியை ஒளிபரப்பலாமா என்ற பேச்சு எழுந்துள்ளது. எந்த கட்சியை தாக்கி பேசி, எந்த கட்சியை எதிர்த்து ஜெயலலிதா அரசியல் செய்தாரோ, அந்த கட்சியின் தலைவர்கள் எல்லாம், எங்களுக்கு முட்டு கொடுப்பதா என்ற ரீதியிலும் ஜெ.,வின் உண்மை தொண்டர்கள் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிடுகின்றனர்.

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா என்ற கவுண்டமனியின் வசனம் நமக்கு ஞாபகத்திற்கு வந்தாலும், அரசியல் மனிதர்களை எப்படியெல்லாம் ஆட்டுவிக்கிறது என்பதைத்தான் காட்டுகிறது. அரசியலோ அல்லது தங்களது தொழிலைக் காப்பாற்றிக்கொள்ளவோ எதுவும் நடக்கும் என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம். எது எப்படியோ.. இறுதியில் ஏதாவது ஒரு வழி மூலமாக செய்திகளின் நடுநிலைத்தன்மை நிலைத்தாலும் சரி! அரசியல் நாகரீகம் வளர்ந்தாலும் சரி! தமிழக மக்களுக்கு நல்லதே நடக்கட்டும்.
