ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் ஏதேனும் அரசியல் கட்சியில் இணைந்து செயல்பட விரும்பினால், ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு அவர்கள் விருப்பம் போல எந்த அரசியல்  கட்சியில் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம் என ரஜினி மக்கள் மன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் கட்சி தொடங்கி போட்டியிடுவார் என அவரது ரசிகர்கள் மட்டுமின்றி தமிழக மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. முன்னதாக டிசம்பர் 31-ஆம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என கூடியிருந்த ரஜினிகாந்த், டிசம்பர் 29 ஆம் தேதி அன்றே, நான் அரசியலுக்கு வரப்போவதில்லை என அறிவித்து தமிழக மக்களுக்கும், அவரது ரசிகர்களுக்கும் அதிர்ச்சி கொடுத்தார். இதனால் அவர் அரசியலுக்கு வருவார் என காத்திருந்த ரசிகர்கள் மற்றும்  ஆதரவாளர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். அதேபோல் தனது உடல்நிலையை காரணம் காட்டி அறிக்கை வெளியிட்ட ரஜினிகாந்த், தான் அரசியலுக்கு வர வேண்டும் விரும்பியதாகவும் ஆனால் சூழல் அதற்கு எதிராக அமைந்து விட்டதாகவும் விளக்கினார். 

மேலும், அரசியலுக்கு வருவேன் என்று எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள், ஆதரவாளர்கள் தயவு செய்து என்னை மன்னித்துவிடுங்கள் என தனது அறிக்கையில்  கோரியிருந்தார். இந்நிலையில் ரஜினி கட்டாயம் அரசியலுக்கு வர வேண்டும், தனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என அவரது கட்சி தொண்டர்கள் போராட்டம் நடத்தினார். ஆனால் அதிலும் எந்த பலனும் இல்லை, இந்நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்தவர்கள் பல்வேறு கட்சிகளில் இணைய தொடங்கியுள்ளனர். இந்நிலையில் நேற்று ரஜினி மக்கள் மன்றத்தின் முக்கிய மாவட்ட நிர்வாகிகள் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்து உள்ளனர். 

இந்நிலையில் இன்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்:  அதில் ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் ஏதேனும் அரசியல் கட்சியில் இணைந்து செயல்பட விரும்பினால், ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு அவர்கள் விருப்பம் போல் எந்த அரசியல் கட்சியில் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம். அவர்கள் வேறு கட்சிகளில் இணைந்தாலும் அவர்கள் எப்போதும் நம் அன்பு தலைவரின் ரசிகர்கள் தான் என்பதை ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் யாரும் மறந்து விடக்கூடாது என அதில் கூறியுள்ளார்.