‘வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் எந்தத் தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிடுகிறாரோ அதே தொகுதியில் நான் போட்டியிடுவேன்’ என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மு.க. ஸ்டாலினை எதிர்த்து சீமான் போட்டியிட்டால் டெபாசிட் பறிபோகும் என்று திமுக எம்.எல்.ஏ. மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்பிரமணியன், “அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகையைக் கொடுக்க வேண்டாம் என்று திமுக கூறவில்லை. கொடுக்கும் தொகைக்கான டோக்கனை அரசு ஊழியர்கள் மூலம் விநியோகிக்க வேண்டும். அதிமுகவினர் மூலம் விநியோகிப்பதைதான் திமுக எதிர்க்கிறது. டெபாசிட் தொகையை இழக்கவே சீமான் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட முடிவு எடுத்துள்ளார். ரஜினி அரசியலில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் திமுகவின் ரூட் எப்போதுமே கிளியர்” என்று தெரிவித்தார்.