தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வரு மே மாதத்தில் நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கு அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டுள்ளார். இதை கூட்டணி கட்சியான தமிழக பாஜகவினர் ஏற்காமல், அதை பாஜக தலைமைதான் முடிவு செய்யும் என்று பேசிவருகிறார்கள். இந்நிலையில் பாஜக தலைவர் எல்.முருகன் இன்றும் அதே கருத்தை அரியலூரில் தெரிவித்தார். “தமிழகத்தில் யார் முதல்வர் வேட்பாளர் என்பதை பாஜக தலைமைதான் முடிவு செய்யும். முதல்வர் அதிமுகவினராக இருப்பினும் அந்த அறிவிப்பை பாஜக தலைமைதான் அறிவிக்கும்" என்று தெரிவித்தார்.

எல்.முருகனின் இந்தப் பேச்சு அதிமுகவினர் மத்தியில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. எல்.முருகனுக்கு எதிராக அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான அன்வர் ராஜாவும் கருத்து தெரிவித்துள்ளார். “முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அதிமுக முன்பே அறிவித்துவிட்டது. பாஜக அதிமுக கூட்டணியில் இருக்க வேண்டுமென்றால், எங்களுடைய முதல்வர் வேட்பாளரை ஏற்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் அதிமுக கூட்டணியில் தொடர முடியாது. பாஜக தனித்துதான் போட்டியிட வேண்டியதுதான். எல்.முருகனுக்கெல்லாம் பதில் சொல்ல தேவையில்லை. அவர் தற்போதுதான் அரசியலுக்கு வந்துள்ளார்” என்று அன்வர் ராஜா காட்டமாகப் பதிலடி கொடுத்துள்ளார்.