அதானியின் காட்டுப்பள்ளி துறைமுகம் விரிவாக்கம் செய்யப்பட்டால் இரண்டு பொதுத்துறை துறைமுகங்களும் மூடவேண்டிய அபாயம் ஏற்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை அருகே திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள காட்டுப்பள்ளியில் அமைந்திருக்கும் அதானியின் துறைமுகம், முன்பு எல் அண்ட் டி நிறுவனத்தால் 330 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு சிறு துறைமுகமாக, சில ஏற்றுமதிக்காக மட்டும் அனுமதி பெற்று 2012-ம் ஆண்டில் இருந்து இயங்கிவந்தது. எல்.அண்ட் டி நிறுவனத்தின் சிறிய துறைமுகத்தை 2018-ல் அதானி குழுமம் வாங்கியது. அதனை ஒரு பெரும் வர்த்தக துறைமுகமாக சுமார் 6000 ஏக்கர் அளவில் விரிவாக்கம் செய்ய அதானி குழுமம் திட்டம் தயாரித்துள்ளது.


சுமார் 53 ஆயிரம் கோடி செலவில் உருவாக்கப்படவுள்ள இந்த துறைமுகத்தின் சுற்றுச்சூழல், சூழல் தாக்க மதிப்பு ஆய்வு அறிக்கையை வெளியிடபட்டுள்ளது. இந்த அறிக்கைகள் முழுமையாக தமிழில் மக்களிடம் கிடைக்க வழிவகை செய்யாமல் கருத்துக்கேட்பு கூட்டம் 2021 ஜனவரி 22 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்படும் மக்கள் அதிகமாகவுள்ள காட்டுப்பள்ளியில் கருத்துகேட்பு கூட்டம் நடத்தாமல் மீஞ்சூரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் இருக்கும் சூழ்நிலையில் அவசர, அவசரமாக இந்தக் கூட்டம் நடத்த வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வியும் எழுந்துள்ளது.
பல நிபுணர்களும், மக்கள் பிரதிநிதிகளும் இந்தத் துறைமுக திட்டம் சட்டத்துக்கு புறம்பானது எனவும், அரசின் சுற்றுச்சூழல் மண்டல விதிகளுக்கும் புறம்பானது எனவும் ஆதாரப்பூர்வமாகக் கருத்து தெரிவித்துள்ளனர். துறைமுக விரிவாக்கம் நடைபெற்றால், மீதம் இருக்கிற கடற்கரையும் அரிக்கப்பட்டுவிடும் என்றும், கொற்றலை ஆறு கடலோடு கலந்துவிடும் அபாயம் உள்ளது எனவும் மக்கள் தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் எண்ணூர் -பழவேற்காடு மக்கள் வாழ்வாதாரம் இந்தத் திட்டத்தால் பெருமளவு பாதிப்புக்கு உள்ளாகும். மீனவ மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படும் ஆபத்தும் உள்ளது. இதனால் இந்தத் திட்டம் நிறுத்தப்பட வேண்டும் என்பது மக்களின் வலுவான கோரிக்கையாக எழுந்துள்ளது.