கொரோனா வைரஸ் தொற்றால் பொதுமுடக்கத்தை அறிவித்தது மத்திய அரசு. இதன்காரணமாக பல்வேறு தனியார் நிறுவனங்கள்  வருமானம் குறைப்பை காரணம் காட்டி ஆட்குறைப்பு என்கிற பெயரில் வேலையில் இருந்து நீக்கி வருகின்றனர். இதனால் வேலையின்றி பல்வேறு குடும்பங்கள் தவியாய் தவித்து வருகிறார்கள். உணவுக்கும் குடியிருக்கும் வாடகைக்கும் வருமானம் இன்றி தடுமாறியிருக்கும் தனியார் நிறுவன ஊழியர்கள் மாற்று தொழில் செய்ய முன் வந்திருக்கிறார்கள். இவர்களுக்கு மத்திய அரசோ மாநில அரசோ எந்த உதவிகளையும் செய்ய முன்வரவில்லை என்பது தான் வேதனையான விசயம். தேசிய பேரிடர் காலத்தில் தனியார் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வேலையை விட்டு விரட்டுவதை யாரும் கண்டிக்க வில்லை. எந்த அரசும் நடவடிக்கை எடுக்க வில்லை.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் புரட்டி எடுத்து வருகிறது.இந்தியாவில் பல்வேறு கட்டமாக பொது ஊரடங்கு போடப்பட்டு வருகிறது. பொதுத்துறை நிறுவனங்களை தவிர தனியார் நிறுவனங்கள் ஊரடங்கிற்கு பிறகு தங்களது ஊழியர்களை எந்த விதமான முன்னறிவிப்பும் இன்றி வெளியேற்றி வருகிறார்கள். வழங்கி வரும் சம்பளத்தில் குறிப்பிட்ட சதவீதம் பிடித்தம் செய்து வருகிறார்கள். பொதுமுடக்கத்தால் வேலை இழந்த தெலங்கானாவைச் சேர்ந்த தனியார் பள்ளி முதல்வர் தற்போது இட்லி, தோசை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.

 ஊரடங்கு உத்தரவால் வேலை இழந்த தெலங்கானாவைச் சேர்ந்த தனியார் பள்ளி முதல்வர் தற்போது இட்லி, தோசை தயாரித்து விற்பனை செய்து வருவது வைரலாகி வருகிறது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலினால் நாடு முழுவதும் கடந்த மார்ச் 24 முதல் பொது முடக்கம் அமலில் இருந்து வருகிறது. பொதுமுடக்கத்தினால் அனைத்துத் துறைகளும் கடும் சரிவை சந்தித்துள்ளன. பல நிறுவனங்களில் ஆள் குறைப்பு, சம்பளக் குறைப்பு நடவடிக்கைகளும் நிகழ்ந்து வருகின்றன. 


 தெலங்கானா மாநிலம் கம்மம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் முதல்வராக பணிபுரிந்தவர் மரகனி ராம்பாபு. பொதுமுடக்கத்தால் தனது வேலையை இழந்துள்ளார். வருமானம் இன்றி தவித்து வந்த அவர் வேறு தொழில் தெரியாத நிலையில் தற்போது நடமாடும் வண்டியில் இட்லி, தோசை விற்பனை செய்து வருகிறார். பள்ளியின் முதல்வராக இருந்த மரகனி ராம்பாபு தனது மனைவியுடன் இணைந்து தினமும் காலை உணவைத் தயாரித்து விற்பனை செய்து செய்து வருகிறார்.


இதுகுறித்து மரகனிராம்பாபு கூறும் போது..."பொதுமுடக்கம் முடிந்து பள்ளி திறக்கும் வரை பள்ளி முதல்வர் பதவிக்கு ஆள் தேவையில்லை என்று பள்ளி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனால் பொதுமுடக்க காலத்தில் எனக்கு வருமானம் இல்லை. வேறு வருமானம் இல்லாதததால் இந்த முடிவுக்கு வந்தோம். தற்போதைய சூழ்நிலையில் காலை உணவுக்கு இட்லி, தோசை, வடை விற்கிறோம்.இந்த பொதுமுடக்க காலத்தில் என்னைப் போன்று பலர் வேலையில்லாமல் உள்ளனர். இந்த நெருக்கடி நேரத்தில் அரசு உதவி செய்ய வேண்டும் என்றார்.

தனியார் நிறுவனங்கள்  ஆட்குறைப்பு என்கிற பெயரில் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பு செயலை  தெலுங்கானா முதல்வர் கண்டுகொள்ள வேண்டும். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.