ஹிந்துஸ்தான் டைம்ஸ் தலைமை உச்சி மாநாட்டில் வோடஃபோன் ஐடியா நிறுவனத் தலைவரான குமார் மங்களம் பிர்லா கலந்துகொண்டார். அப்போது தங்களுக்குத் தேவையான உதவிகள் அரசிடமிருந்து கிடைக்கவில்லை என்றால் நிறுவனத்தை இழுத்து மூடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று வெளிப்படையாகப் பேசியுள்ளார். அரசிடமிருந்து போதிய உதவி கிடைக்காவிட்டால் நிறுவனத்தில் இனிமேல் முதலீடு செய்யப்போவதில்லை எனவும் கூறியுள்ளார்.

இந்திய நெட்வொர்க் துறையை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருப்பதாகவும், அரசின் உதவி கண்டிப்பாகக் கிடைக்கும் எனவும் குமார் மங்களம் பிர்லா நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

போதிய வருவாய் ஈட்டமுடியாமல் தவிக்கும் வோடஃபோன் ஐடியா நிறுவனம் பங்குச் சந்தையிலும் அடிவாங்கியுள்ளது. அதன் பங்கு ஒன்றின் விலை 5.48 சதவீத சரிவுடன் ரூ.6.90 ஆக இருக்கிறது.

இந்நிலையில் குமார் மங்களம் பிர்லாவுக்கு பதில் அளித்து பாஜக எம்.பி.ராஜீவ் சந்திரசேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், குமார் மங்களம் பிர்லாவுக்கு ஏற்பட்டுள்ள இத்தகைய அழுத்தத்திற்கு ஒரு எளிய தீர்வு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள  TARP ஐப் போலவே, எல்.ஐ.சி / ஐ.ஐ.எஃப் போன்ற அரசு நிறுவனங்களின்  அரசு நிதியை  சமமாக முதலீடு செய்து ஐடியா – வோடாபோன் நிறுவனங்களை  கையகப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

 பின்னர் அடுத்த ஆண்டு ஒரு புதிய உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனத்திற்கு  அந்நிறுவனத்தை விற்க உலகளாவிய ஏலத்தை நடத்த வேண்டும் எனவும் பிரதமர் அலுவலகத்துக்கு ராஜீவ் சந்திரசேகர் எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார்..