தமிழகத்தில் எல்லா ஊர்களிலும் ஐடி பார்க்... தமிழக அரசு அசத்தல் தகவல்..!
தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைக்கப்படும்
படித்த இளைஞர்கள் வேலைக்காக சென்னை போன்ற நகரங்களுக்குச் செல்லவேண்டிய சூழலைத் தவிர்க்கும் வகையில், தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைக்கப்படும் என தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
கோவை விளாங்குறிச்சி பகுதியில் 114 கோடி மதிப்பில் புதியதாக சிறப்பு பொருளாதார மண்டல கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமான பணிகளை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’கோவையில் 114 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு செய்து , விரைவில் கட்டுமான பணிகளை நிறைவு செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தகவல் தொழில்நுட்பப் பூங்காவை அமைக்கப்படும். இதன் மூலமாக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதே நோக்கம். தென் மாவட்டங்களில் மிகக்குறைவாகவே தொழில் வாய்ப்பு உள்ளது, அதனால் அங்கு உள்ள படித்த இளைஞர்கள் வேலைக்காக சென்னை போன்ற பிற மாவட்டங்களை தேடி செல்ல கூடிய சூழல் உள்ளது.
எனவே தென் மாவட்டங்களில் கவனம் செலுத்தி தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். தென் மாவட்டங்களில் வேலை வாய்ப்பு உருவாக்கப்படும். கடந்த 10 ஆண்டுகளில் தொழில் முதலீடுகள் அண்டை மாநிலங்களை நோக்கி சென்று விட்டது. தற்போது புதியதாக தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.