கடந்த 18 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல்களில் அதிமுக கூட்டணி அதிக அளவில் வெற்றியைக் குவிக்கும் என மாநில உளவுத் துறை அளித்த ரிப்போர்ட்டால் எடப்பாடி தரப்பினர் மிகுந்த மகிழ்ச்சியில் மிதந்தனர்.

இதையடுத்து வரும் மே 19 ஆம் நடைபெறவுள்ள 4 தொகுதிகளுக்காக இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அந்த தொகுதிகளுக்கான பணிகளில் ஆளும் அதிமுக இறங்கியுள்ளது. விருப்ப மனு அளிக்கலாம் என அதிமுக அறிவித்துள்ளது.

இந்நிலையில் தேர்தலன்று மத்திய உளவுத் துறையான ஐ.பி, மாநிலம் முழுவதும் ரகசிய சர்வே ஒன்றை எடுத்துள்ளது. அந்த சர்வேயின் முடிவுகள் மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே மாநில உளவுத்துறை  அதிமுகவிற்கு சாதமாக நாடாளுமன்றத் தொகுதிகள் இருக்கும் என்று கொடுத்த அறிக்கை அப்படியே மாறிவிட்டது. ஐபி அளித்துள்ள அறிக்கையில் அதிமுக- பாஜக -பாஜக இடையே ஏற்பட்ட கூட்டணியை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது வாக்குப்பதிவு முடிந்தபிறகு கண்கூடாக தெரிந்தது என குறிப்பிடப்பட்டுளளது.

இந்தக் கூட்டணி இல்லாமல் இருந்திருந்தால்கூட ஒரு வேளை அதிமுக கணிசமான இடங்களில் வெற்றிபெறும் வாய்ப்பு இருந்திருக்கும். தேர்தல் முடிவுக்குப் பிறகு ஐபி நடத்திய ஆய்வில், நாடாளுமன்றத் தொகுதிகளில் 28 இடங்களைக் கண்டிப்பாக தி.மு.க கூட்டணி பெற்றுவிடும் என தெரிவித்துள்ளது..

அதே நேரத்தில் நான்கு தொகுதிகளில் திமுக – அதிமுக   இடையே கடும் போட்டியிருக்கும் எனறும் தெரியவந்துள்ளது.. அதேபோல,  18 சட்டமன்றத் தொகுதிகளில் 11 தொகுதிகள் கண்டிப்பாக தி.மு.க வெற்றிபெறும் என்றும், . ஏழு தொகுதிகளைக்கூட முழுமையாக அதிமுக ஜெயிக்க வாய்ப்பில்லை என்றும் ஐபி தெரிவித்துள்ளது.

அந்த 7 தொகுதிகளிலும் திமுக – அதிமுக  இடையே கடும் போட்டி இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. சட்டமன்றத் தேர்தல்களைப் பொறுத்தவரை கடைசி நேரத்தில் அதிமுக சார்பில் ஓட்டுக்கு தலா 2000 ரூபாய் வழங்கப்பட்டதால் ஒரு சில தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐபி எடுத்த கணக்குப்படி தேர்தல் முடிவுகள் வந்தால், அதிமுக ஆட்சியில் நீடிப்பது சிக்கலாகிவிடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஐபி யின் இந்த அறிக்கையால் ஆடிப்போயிருக்கும் அதிமுக தரப்பு அடுத்து வரும் 4 தொகுதி இடைத் தேர்தல்களில் அனைத்தையும் கைப்ற்றும் திட்டத்தில் களம் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.