தொடர்ந்து இந்து மதத்தை இழிவுபடுத்தினால், திருமாவளவனுக்கு சேலை கட்டும் போராட்டம் நடத்தப்படும் என, ஏகத்துவ ஜமாத்தின் தலைவர் வேலுார் இப்ராஹிம் கூறினார்.

கோவையில் இது குறித்து பேசிய அவர், ’’தமிழகத்தில், மத நல்லிணக்கம் சிறப்பாக உள்ளது. ஆனால், இந்து - முஸ்லிம் நல்லிணக்கத்திற்கு சில இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்கள், திராவிட கட்சிகள், இடையூறு ஏற்படுத்துகின்றன. இதை ஈ.வெ.ரா., செய்தார். வி.சி., தலைவர் திருமாவளவன் தொடர்கிறார். இந்துக்களுக்கு எதிராக அரசியல் செய்வதோடு, இந்து மதத்தை பற்றி இழிவாக பேசி வருகிறார்.

நம் நாட்டில் ரத்த ஆறு ஓடும் என்கின்றனர், எஸ்.டி.பி.ஐ., கட்சியினர். அத்தகைய அமைப்புகளோடு, திருமாவளவன் கைகோர்த்து செயல்படுகிறார். தொடர்ந்து, இதேபோன்று இந்து மதத்தையும், ஹிந்துக்களையும் இழிவாக பேசினால், திருமாவளவனுக்கு சேலை கட்டும் போராட்டம் நடத்தப்படும். திருமாவளவன் கட்சியினர், சில இடங்களில் நான் நுழையக் கூடாது என்கின்றனர்.

இது, பாரத தேசம், பாகிஸ்தான் இல்லை. மத நல்லிணக்கத்தை அடிப்படையாக கொண்டிருக்கும் என பிரசாரத்தை தொடர்வேன். மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை ஆதரித்து, நடைமுறைப் படுத்தி உள்ளது அ.தி.மு.க., அரசு. ஆனால், அனைத்து திட்டங்களையும், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் எதிர்த்து வருகிறார். வெறும் அரசியல் லாபத்திற்காக செய்கிறார் என்பது மக்களுக்கு தெரியும்’’ என அவர் தெரிவித்தார்.