என்னால் எவ்வளவு விரைவில் அறிவிக்க முடியுமோ அவ்வளவு விரைவில்  அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனைக்குப் பின்னர் போயஸ் தோட்ட இல்லத்தில் அவர் இவ்வாறு கூறினார்.

ரஜினிகாந்த் எப்போது அரசியலுக்கு வரப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இந்நிலையில் 2017 டிசம்பர் இறுதியில் அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது எனவும், விரைவில் அதை நிரப்ப அரசியல் கட்சி தொடங்க உள்ளதாகவும் ரஜினி அறிவித்தார். அவரின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது. அதிரடியாக ரஜினி மக்கள் மன்றம் தொடங்கப்பட்டு, கட்சி தொடங்குவதற்கான  அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்தும் பணிகளில் அவர் தீவிரம் காட்டினார். ஆனால் திடீரென கடந்த சில மாதங்களாக எந்த அரசியல் கருத்துக்களையும் கூறாமல் மௌனம் காத்த ரஜினியால் அவரது மன்ற தொண்டர்கள் மற்றும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் குழப்பமடைந்தனர். 

திடீரென நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார் என்ற கருத்தும் வேகமாக பரவியது, அதாவது கடந்த அக்டோபர் 29ஆம் தேதி ரஜினிகாந்த் பெயரில் வெளியான அறிக்கை ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுகுறித்து விளக்கமளித்த நடிகர் ரஜினிகாந்த் தனது உடல்நிலை மற்றும் டாக்டர்கள் அறிவித்த அறிகுறிகள் தொடர்பாக அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் உண்மைதான் என்றார். அதே போல் அரசியல் கட்சி குறித்து தகுந்த நேரத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து தெரிவிப்பதாகக் கூறியிருந்தார்.இதனால்  ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவாரா.? மாட்டாரா என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் சென்னைக்கு  வரும்படி ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுக்கு ரஜினிகாந்த் அழைப்பு விடுத்தார். இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி தலைமையில் மக்கள் மற்ற ஆலோசனை கூட்டம் தொடங்கியது. அதில் ரஜினி மக்கள் மன்றத்தின் 38 மாவட்ட செயலாளர்களும் கலந்து கொண்டனர். 

அரசியல் கட்சி தொடங்கும் சூழல் உள்ளதா இல்லையா என்பது  குறித்து நிர்வாகிகளிடம் ரஜினி கேட்டறிந்தார். அவர்களும் தங்கள் பகுதியின் நிலவரம் குறித்தும் தங்களது கருத்துக்களையும் ரஜினியிடம் பகிர்ந்தனர். ஒருவேளை கட்சி தொடங்கினால் சட்டமன்ற தேர்தல் களத்தை எப்படி எதிர்கொள்வது, பிரச்சாரப் பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் ரஜினி தனது போயஸ் தோட்ட இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:  மாவட்ட செயலாளர்கள் சந்திப்பு நிகழ்ந்தது, மாவட்ட செயலாளர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர், நானும் என்னுடைய பார்வையை அவர்களிடம் பகிர்ந்து கொண்டேன்.'' நீங்கள் என்ன முடிவு எடுக்கிறீர்கள் அதை ஏற்றுக் கொள்கிறோம் என்று மன்ற நிர்வாகிகள்" தெரிவித்துள்ளனர். ஆகவே எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு விரைவாக எனது முடிவை அறிவிப்பேன். இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்தார். மற்ற கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.