I will definitely punish those responsible for Jayalalithaas death

நான் முதலமைச்சரானால் ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்களை கண்டிப்பாக தண்டிப்பேன் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் ஆர்.கே.நகர் மக்களுக்கு வாக்குறுதி கொடுத்துள்ளார். 

சென்னை, ஆர்.கே.நகருக்கு வரும் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி, டிடிவி தினகரன் ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. தற்போது ஆர்.கே.நகரில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. தேர்தல் நடப்பதற்கு இன்னும் சில நாட்களே உள்ள
நிலையில், சூறாவளி பிரச்சாரத்தில் வேட்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர். 

அதிமுக வேட்பாளரான மதுசூதனனுக்கு வாக்கு சேகரிப்பில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், தொண்டர்கள் என வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல், திமுக வேட்பாளர் மருதுகணேஷை ஆதரித்து திமுக தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆர்.கே.நகர் தொகுதியில், திமுக, அதிமுக, டிடிவி தினகரன் இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில், நேற்றிலிருந்து திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வேட்பாளர் மருதுகணேஷை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார். 

அந்த வகையில், ஆர்.கே நகரில் மருது கணேஷுக்கு ஆதரவாக ஸ்டாலின் 2வது நாளாக பரப்புரை மேற்கொண்டுள்ளார். கொருக்குப்பேட்டை அரிநாராயணபுரத்தில் திமுகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார். 

அப்போது பேசிய அவர் நான் முதலமைச்சரானால் ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்களை கண்டிப்பாக தண்டிப்பேன் என ஆர்.கே.நகர் மக்களுக்கு வாக்குறுதி கொடுத்தார். 

திமுக செயல் தலைவராக பொறுப்பேற்ற ஸ்டாலின் இத்தனை நாட்களில் இன்று தான் தான் முதலமைச்சர் என்ற வார்த்தையை உபயோகப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.