I will continue to talk - Avadi Kumar

அதிமுகவின் செய்தி தொடர்பாளர்கள் பட்டியலில் இருந்து ஆவடி குமார் நீக்கப்பட்ட நிலையில், என்னை இந்த பணியைச் செய்யச் சொல்லியது ஜெயலலிதா. எனவே நான் தொடர்ந்து பேசுவேன் என்றும், எடப்பாடி-பன்னீர் எடுத்த முடிவை விரைவில் திருத்திக் கொள்வார்கள் என்றும் ஆவடி குமார் கூறியுள்ளார்.

தமிழக சட்டசபை கூட்டம், வரும், 8 ஆம் தேதி தொடங்குகிறது. அன்று, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், சட்டசபையில் உரையாற்றுகிறார். சட்டப்பேரவைக் கூட்டத்தில், சுயேச்சையாக வெற்றி பெற்ற தினகரனும், பங்கேற்க உள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், 'டிபாசிட்'டை பறிகொடுத்த தி.மு.க.வினர், சட்டசபையில், பல்வேறு பிரச்னைகளை எழுப்ப திட்டமிட்டுள்ளனர். மேலும், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்களை தங்கள் வசம் இழுத்து, ஆட்சியை கவிழ்க்க, தினகரனும் முயற்சித்து வருகிறார். 

இவற்றை முறியடிக்கவும், சட்டசபை கூட்டத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை தீர்மானிக்கவும், அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், இன்று காலை, 10:00 மணிக்கு, சென்னையில், ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தொடங்கி நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் கலந்து கொண்டு உரையாற்றினர். இந்த கூட்டத்தில், சொந்த காரணங்களின் காரணமாக 7 எம்.எல்.ஏக்கள் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், அதிமுகவின் செய்தி தொடர்பாளர்களாக 12 பேரை கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை ஒருங்கிணைப்பாளரும் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், வளர்மதி, கோகுலா இந்திரா, வைகைச்செல்வன், ஜேசிடி பிரபாகர், முன்னாள் எம்எல்ஏக்கள் சமரசம், கோவை செல்வராஜ், தீரன் என்ற ராஜேந்திரன், மகேஸ்வரி பாபு முருகவேல், முன்னாள் எம்.பி., கே.சி.பழனிச்சாமி, மருது அழகுராஜ் ஆகியோர் செய்தி தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களை தவிர வேறு யாரும் அதிமுக சார்பில் மீடியாக்களில் கலந்து கொள்ள அனுமதி இல்லை. 

தோழமை கட்சிகளில் இந்திய தேசிய முஸ்லீம்லீக் கட்சி மாநில தலைவர் ஜவஹர் அலி மட்டுமே கலந்து கொள்வார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஜெயலலிதா இருந்தபோது, டிவி மீடியாக்களில் பங்கேற்று வந்த ஆவடி குமார், இந்த பட்டியலில் இடம்பெறவில்லை.

ஜெயலலிதா இருந்தபோது, அதிமுக சார்பில் மீடியாக்களில் நடைபெறும் விவாதங்களில் ஆவடி குமார் பங்கேற்று வந்தார். இந்த நிலையில் அவர் தீடீரென, செய்தி தொடர்பாளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 

செய்தி தொடர்பாளர் பட்டியலில் ஆவடி குமார் நீக்கப்பட்டதற்கான காரணம் மீடியாக்கள், அவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது, கட்சியில் சிலருக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதன் காரணமாகவே ஆவடி குமாரின் பெயர் திட்டமிட்டு நீக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இது குறித்து ஆவடி குமார் பேசும்போது, கட்சியின் நிர்வாகிகள் ஒன்றுகூடி செய்தி தொடர்பாளர்களை நியமித்துள்ளனர். அதனால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றார். இப்படிப்பட்ட ஒரு முடிவு எடுக்கப்போவது குறித்து என்னிடம் யாரும் கலந்து பேசவோ, ஆலோசிக்கவே இல்லை என்றார்.

நமது எம்ஜிஆர் நாளிதழில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, ஜெயலலிதா என்னுடைய எழுத்தைப் பார்த்து பாராட்டினார். பின்னர், என்னைத் தனிப்ட்ட முறையில் அழைத்து, கட்சி சார்பில் ஊடக விவாதங்களில் கலந்து கொள்ளுங்கள் என்று கூறினார். அவரின் உத்தரவின்பேரில்தான் இதுநாள்வரை நான் விவாதங்களில் பங்கேற்று வருகிறேன். 

ஆனால், கட்சியின் தலைமை இப்போது ஒரு முடிவை எடுத்திருக்கிறது. அதில் என் பெயர் இல்லை. ஆனால், அது என்னை கட்டுப்படுத்தாது. நான் தொடர்ந்து ஊடகங்களில் விவாதங்களில் கலந்து கொள்வேன் என்றார். அவர்கள் வெளியிட்ட பட்டியலுக்காக மீடியாட்ககளுடன் இருந்து என்னை நான் துண்டித்துக் கொள்ள மாட்டேன் என்று கூறினார். 

ஏனென்றால் இந்த பணியை செய்யச் சொல்லியது ஜெயலலிதா. ஆகையால், நான் தொடர்ந்து பேசுவேன். அவர்களின் முடிவை விரைவில் திருத்திக் கொள்வார் என்று ஆவடி குமார் கூறினார்.