வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் எந்த தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறாரோ அதே தொகுதியில் நான் போட்டியிடுவேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.மேலும் ரஜினி அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்தபோது பல விமர்சனத்தை நான் முன்வைத்தேன் இப்போது அதற்கெல்லாம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் அவர் கூறியுள்ளார். நம்மாழ்வாரின் 7 ஆம் ஆண்டு நினைவு நாளை அனுசரிக்கும் விதமாக சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மலர் வணக்க நிகழ்வு நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர மாட்டேன் என்ற அறிவிப்பை தான் முழுமையாக வரவேற்பதாகவும் அவர் இளம் வயதிலேயே மன நிம்மதியை தேடி இமயமலைக்கு சென்றவர், இப்போது அவருக்கு முழுமையான ஓய்வு தேவைப்படுகிறது, அதனால் தான் அவர் அரசியலுக்கு வர மாட்டேன் என கூறியிருக்கிறார். இதை  நான் வரவேற்கிறேன் என்றார். அதிமுகவை விட திமுகவை கடுமையாக விமர்சிக்கிறீர்களே என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அதிமுகவை எதிர்க்க வேண்டிய வேலை இல்லை அங்கு வில்லன் இல்லாத பொழுது ஹீரோவுக்கு என்ன வேலை என்றார். மேலும் இந்த சட்டமன்ற தேர்தலில் திராவிடமா தமிழனா  என்று பார்த்துவிடலாம் என்றும் கூறினார். 

இந்துத்துவத்தை விட தி.மு.கவை அதிகமாக எதிர்ப்பதற்கு என்ன காரணம் என்ற கேள்விக்கு எங்கள் கட்சிகள் 90% பேர் இந்துக்கள் என்று ஸ்டாலின் தானே சொன்னார் ஆனால் நாங்கள் இந்துக்கள் கிடையாது. சைவர்கள், எங்களுடைய இறைவழிபாடு என்பது வேறு, மொத்தத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் எந்த தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறாரோ அதே தொகுதியில் நான் போட்டியிடுவேன் என்றார்.  மேலும் ரஜினி ரசிகர்களின் கடுமையான விமர்சனத்திற்கு பதில் அளித்த சீமான் நான்  பேசியதால் தான் ரஜினி கட்சி தொடங்க வில்லை என்றால் எனக்கு சந்தோஷம்தான் என்று அவர் கூறினார்.