சிதம்பரம் தொகுதியில் தான் போட்டியிடுவேன் என்று திருமாவளவன் பிடிவாதம் காட்டும் நிலையில் அதற்கு வாய்ப்பு இல்லை என்று தி.மு.கவும் இறங்கி வர மறுப்பதற்கான காரணம் வெளியாகியுள்ளது. 

கடந்த 2004ம் ஆண்டு முதல் முறையாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட திருமாவளவன் தேர்வு செய்த தொகுதி சிதம்பரம். அப்போது கூட்டணி எதுவும் இல்லாமல் தனித்தே களம் இறங்கி இரண்டு லட்சம் ஓட்டுகளுக்கு மேல் பெற்றாலும் வெற்றி வாய்ப்பை திருமாவளவன் பறிகொடுத்தார். ஆனால் 2009 தேர்தலில் தி.மு.க கூட்டணியில் களம் இறங்கி சிதம்பரம் எம்.பியானார் திருமா. 

மீண்டும் 2014 நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியிலேயே தி.மு.க கூட்டணியில் களம் இறங்கினாலும் திருமாவளவனால் வெற்றி பெற முடியவில்லை. இருந்தாலும் கூட சிதம்பரம் தொகுதியில் தான் மீண்டும் எம்.பியாக தேர்வாவது என்பதில் திருமாவளவன் உறுதியாக இருப்பதற்கான காரணம் தெரியவந்துள்ளது. கடந்த 2009 தேர்தலில் விடுதலைச்சிறுத்தைகளுக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

சிதம்பரத்தில் திருமா போட்டியிட்டார். விழுப்புரம் தொகுதியில் வி.சி.க சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதியான சுவாமிநாதன் போட்டியிட்டார். வி.சி.க வேட்பாளர் சுவாமிநாதன் வெற்றி வாய்ப்பை வெறும் 20 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் இழந்தார். இதற்கு காரணம் விழுப்புரம் மாவட்ட தி.மு.க செயலாளரும் அப்போதைய உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி தான் என்று ஒரு பேச்சு எழுந்தது. விழுப்புரம் தொகுதியை தனக்கு நெருக்கமான ஒருவருக்காக தயார் செய்த நிலையில் கூட்டணி கட்சிக்கு சென்றதை ஏற்க முடியாமல் பொன்முடி உள்ளடி வேலைகளை பார்த்ததாக கூறப்பட்டது.

 

இதனால் தான் 2014 தேர்தலில் விழுப்புரம் தொகுதியை திருமாவளவன் வேண்டாம் என்று கூறிவிட்டு திருவள்ளூர் தொகுதியை பெற்றார். இந்த சூழலில் தான் அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் திருமாவுக்கு விழுப்புரம் தொகுதியை தி.மு.க ஒதுக்கியதாக சொல்லப்படுகிறது. ஆனால் தற்போதும் பொன்முடி தான் தி.மு.கவின் மாவட்டச் செயலாளர் என்பதால் உள்ளடி வேலைகள் பார்ப்பார் என்று கருதியே திருமா அந்த தொகுதியை வேண்டாம் என்கிறார். 

இந்த சூழலில் கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை இரண்டு தொகுதிகள் உள்ளன. ஒன்று கடலூர், மற்றொன்று சிதம்பரம். இதில் சிதம்பரம் தொகுதியில்  பல வருடங்களாக தி.மு.க போட்டியிட்டதே இல்லை. இந்த சூழலில் கடலூர் தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

 

மேலும் சிதம்பரத்தையும் விடுதலைச்சிறுத்தைகளுக்கு ஒதுக்கிவிட்டால் அந்த மாவட்டத்தில் தி.மு.கவிற்கு போட்டியிட தொகுதி கிடையாது. எனவே தான் சிதம்பரத்தை தி.மு.க வைத்துக் கொள்ள வேண்டும் என்று கடலூர் மாவட்ட செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வலியுறுத்தி வருகிறார். இதனால் தான் சிதம்பரம் தொகுதிக்கு தி.மு.க – வி.சி.க என இரு கட்சிகளுமே போட்டியிட்டு வருகின்றன. முடிவு எப்படி இருக்கும் என்பது விரைவில் தெரிந்துவிடும்.