தமிழகத்தின் வளர்ச்சிக்கான மத்திய, மாநில அரசின் திட்டங்களை விரைவாகவும் முழுமையாகவும் செயல்படுத்துவதற்கு நான் உறுதுணையாக இருப்பேன் என எம்.பி. ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- "காமராஜர், மூப்பனாரின் ஆசியோடு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இன்று நான் பொறுப்பேற்றிருக்கிறேன். மாநிலங்களவை உறுப்பினராவதற்கு தமாகாவுக்கு வாய்ப்பளித்த தமிழக முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் அதிமுகவுக்கும் இயக்கத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாஜகவின் தேசியத் தலைமைக்கும் பாமக, தேமுதிக, சமத்துவ மக்கள் கட்சி மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மத்திய அரசு, தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்தும், பலப்படுத்தியும், பொருளாதார முன்னேற்றத்தை விரைவுபடுத்தியும் ஒட்டுமொத்த இந்திய தேசத்தின் அனைத்துத் துறைகளிலும் சீரான வளர்ச்சிக்குத் தொடர்ந்து செயலாற்றி வருகிறது. தமிழக அரசு, தமிழகத்தின் வளர்ச்சியிலும் மக்கள் நலனிலும் அக்கறை கொண்ட அரசாக சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இத்தகைய நல்ல சூழலில், தமிழகத்தின் வளர்ச்சிக்கான மத்திய, மாநில அரசின் திட்டங்களை விரைவாகவும் முழுமையாகவும் செயல்படுத்துவதற்கு நான் உறுதுணையாக இருப்பேன். மாநிலங்களவையில் தமிழக மக்களின் குரலாக ஒலிப்பேன்.

மத்தியில் நிலுவையில் உள்ள தமிழக நலன் சார்ந்த அனைத்துத் துறை சார்ந்த திட்டங்களை விரைவில் செயல்படுத்த இயன்ற அனைத்து முயற்சிகளையும் எடுப்பேன். விவசாயிகள், தொழிலாளர்கள், நெசவாளர்கள், மீனவர்கள், சிறு, குறு தொழில் அமைப்புக்கள் மகளிர், மாணவர் மற்றும் எஸ்.சி/எஸ்.டி பிரிவினர், சிறுபான்மையினர் மற்றும் பிற நலிந்த பிரிவினரின் நலனுக்காகவும் உயர்வுக்காகவும் தொடர்ந்து பாடுபடுவேன். மக்கள் பணியிலும் இயக்கப் பணியிலும் இடைவிடாது என்னோடு பயணிக்கும் தமாகாவின் தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். தேச நலன், தமிழக மக்கள் நலன் சார்ந்த என் பணிக்கு தமிழக மக்களின் ஆதரவு வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.