முதல்வர் ஸ்டாலினின் பொய் வாக்குறுதியை ஆளுநர் அம்பலப்படுத்தி விட்டார் என்றும் விமர்சித்து வருகின்றன. இந்த விவகாரத்தில் அடுத்து என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து அனைத்துக் கட்சிகளையும் கூட்டி திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார், இந்த கூட்டத்தை பாஜக அதிமுக புறக்கணித்தன, ஆனாலும் அக்கூட்டத்தில் மீண்டும் சட்டமன்றத்தில் நீட் விலக்கு கோரி மசோதா நிறைவேற்றி அதை ஆளுநருக்கு அனுப்பி வைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
திமுகவால் மட்டும்தான் நீட் தேர்வில் இருந்து விலக்கு ஏற்படுத்தித்தர முடியும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் உள்ளது என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ள நிலையிலும் மா.சு இவ்வாறு கூறியுள்ளார்.
தமிழகத்தில் பத்து ஆண்டுகள் கழித்து திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. அரசு எடுத்து வரும் ஒவ்வொரு நடவடிக்கையும் மக்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது. கொரோனா, மழை காலத்தில் அரசு செயல்பட்ட விதம் மக்கள் மத்தியில் அரசுக்கு நற்பெயரை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இது ஒருபுறம் இருந்தாலும் தேர்தல் நேரத்தின் போது கொடுத்த வாக்குறுதிகளை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றவில்லை என்ற விமர்சனம் எதிர்க்கட்சிகள் மத்தியில் உள்ளது. குறிப்பாக நீட் விவகாரத்தில் அதிமுக பாஜக முதல்வர் ஸ்டாலின் மிககடுமையாக விமர்சித்து வருகின்றன. ஆட்சிக்கு வந்த உடனே நீட் தேர்வை விலக்குவோம், ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட்தேர்வு விலக்குவதற்குதான் போடப்படும் என ஸ்டாலின் வாக்குறுதி அளித்த நிலையில், இதுவரையிலும் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியவில்லை. இதை வைத்தே அதிமுக பாஜக உள்ளிட்ட கட்சிகள் திமுகவை கடுமையாக விமர்சித்து வருகின்றன. பொய் வாக்குறுதிகளை கொடுத்து திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது, நீட் தேர்வை ரத்து செய்வோம் எனக்கூறி மக்களின் வாக்குகளை வாங்கிய திமுக இதுவரையில் ஏன் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறவில்லை என்ற கேள்வியை முன்வைத்து திமுகவை கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இந்த விமர்சனங்களை எதிர்கொள்ளும் விதமாக கடந்த ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி சட்டமன்றத்தைக் கூட்டி நீட் விலக்கு மசோதா நிறைவேற்றி அதை திமுக அரசு ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. அதில் எந்த நடவடிக்கையில் இன்றி காலம் தாழ்த்தி வந்த ஆளுநர் ரவி, 143 நாட்களுக்கும் பிறகு அம்மசோதாவை மீண்டும் திருப்பி அனுப்பியுள்ளார். இது திமுக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நீட்டை ரத்து செய்வோம் என்று திமுக கூறியது பொய் வாக்குறுதி என்பது ஆளுநர் மசோதாவை திருப்பி அனுப்பியதன் மூலம் தெரிய வந்துள்ளது. முதல்வர் ஸ்டாலினின் பொய் வாக்குறுதியை ஆளுநர் அம்பலப்படுத்தி விட்டார் என்றும் விமர்சித்து வருகின்றன. இந்த விவகாரத்தில் அடுத்து என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து அனைத்துக் கட்சிகளையும் கூட்டி திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார், இந்த கூட்டத்தை பாஜக அதிமுக புறக்கணித்தன, ஆனாலும் அக்கூட்டத்தில் மீண்டும் சட்டமன்றத்தில் நீட் விலக்கு கோரி மசோதா நிறைவேற்றி அதை ஆளுநருக்கு அனுப்பி வைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அதற்கான சட்ட ஆலோசனைகளும் தமிழரசு பெற்று வருகிறது.
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திமுகவால் மட்டும்தான் நீட் தேர்விலிருந்து விலக்கு ஏற்படுத்தித்தர முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது என்றும், நிச்சயம் திமுக அதை செய்யும் என்றும் கூறியுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேளச்சேரி மேற்கு பகுதி 175,176, 177 மற்றும் 178 ஆகிய வார்டுகளில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது என்றார். செல்லும் இடமெல்லாம் மக்கள் நல்ல வரவேற்ப்பை வழங்கி வருகின்றனர் என்றார். நீட் தேர்வை வைத்து அதிமுக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறதே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், நீட் தேர்வு கொண்டுவந்தவர்கள் அப்படித்தான் செய்வார்கள் என்றார்.

ஜெயலலிதா இருக்கும் வரை நீட் தேர்வு தமிழகத்திற்கு நுழைய முடியவில்லை, அவர் இறந்த பின்புதான் நீட் வந்தது. அதனால்தான் பல மாணவ மாணவியர் இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார். பொங்கல் பரிசு பொருட்கள் முறையாக தரவில்லை என பொதுமக்கள் யாரும் சொல்லவில்லை, அதிமுகவின் பொய் பிரச்சாரம் ஒருபோதும் மக்கள் மத்தியில் எடுபடாது என்ற அவர், நீட் தேர்வில் இருந்து திமுகவால் மட்டுமே விலக்கு பெற்றுத்தர முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது, நிச்சயம் அது செய்யப்படும் என்றார். மக்கள் நீதி மையத்திற்கு எதிராக ரவுடிகள் அதிக அளவில் உள்ளனர் என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளாரே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், கமல் யாரை குறிப்பிட்டுச் சொன்னார் என்று தெரியவில்லை, யாரென்று கமல் கூறினால் நாங்களும் காவல்துறைக்கு தெரிவித்து நடவடிக்கை எடுப்போம் என மா. சுப்ரமணியன் உறுதியளித்தார்.
