நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்கு வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. காங்கிரசு அ.தி.மு.க-வும் நேரடியாக மோதிக்கொள்ளும் இந்தத் தொகுதியில்  அமைச்சர்கள் முகாமிட்டுத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பால்வளத்துறை அமைச்சரான ராஜேந்திர பாலாஜிக்கு களக்காடு ஒன்றியத்தின் வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

களக்காடு ஒன்றியம் கேசவனேரி கிராமத்துக்கான பொறுப்பும் ராஜேந்திர பாலாஜியிடம் கொடுக்கப்பட்டிருந்தது.  அந்தப் பகுதியைச் சேர்ந்த ஜமாத் தலைவர் முகமது ஷெரிப் என்கிற பைசல் உள்ளிட்ட சிலர், அமைச்சரை சந்தித்து தங்கள் பகுதியில் ரேஷன் கடை அமைத்துத் தருமாறு மனு அளிக்கச் சென்றுள்ளனர்.

மனு அளிக்கச் சென்றவர்களிடம்   இஸ்லாமிய சமுதாய மக்களையும் அவமதிக்கும் வகையில் அவர் பேசியதாக கூறப்பட்டது. பொறுப்பு மிகுந்த பதவியில் இருக்கும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பொறுப்பற்ற முறையில் பேசியிருப்பது கண்டனத்துக்குரியது. காஷ்மீரைப் போல இங்குள்ள முஸ்லிம்களையும் ஒதுக்கிவைப்போம் என்று அவர் கூறியிருப்பது சிறுபான்மை மக்களை அச்சப்படுத்தக்கூடியது என ஆத்திரமடைந்த தமிழகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமிய சமுதாயத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

 

இந்த நிலையில் இஸ்லாமியர்களை பற்றி தான் தவறாக பேசியதாக பரப்பப்படும் தகவல்கள் உண்மையில்லை என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விளக்கமளித்துள்ளார். நெல்லை மாவட்டம் களக்காடு அருகே கருவேலங்குளத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி  தன் மீது திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் அவதூறு பரப்புவதாக எனக்கு தகவல்கள் வந்துள்ளன. 

இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் அதிமுகவுக்கு வாக்களிக்க தயாரானதால், அதனை தடுக்கும் நோக்கில் திமுக திட்டமிட்டு அரசியல் நாடகம் நடத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.