சபாநாயகர் அனுப்பிய தகுதி நீக்கம் தொடர்பாக எம்.எல்.ஏ பிரபு தனியாக விளக்கம் அளிக்கத் தேவையில்லை என சட்டப்பேரவை செயலாளர் தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் அனுப்பிய தகுதி நீக்கம் தொடர்பான நோட்டீசுக்கு பதில் அளிக்க கால அவகாசம் கோரி, சட்டப்பேரவை செயலரிடம் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., பிரபு மனு அளித்தார். அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு ஆகிய மூவரும் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அரசு கொறடா ராஜேந்திரன், சபாநாயகரிடம் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், மூன்று எம்.எல்.ஏ.,க்களும் ஒரு வாரத்துக்குள் விளக்கம் அளிக்குமாறு சபாநாயகர் தனபால் கடந்த 30ம் தேதி நோட்டீஸ் அனுப்பினார். இதை எதிர்த்து ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகிய 2 எம்.எல்.ஏ.,க்கள் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டனர்.

இதையடுத்து, 3 எம்.எல்.ஏ.க்கள் மீதான சபாநாயகரின் நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்த நீதிபதிகள், 4 வாரத்தில் பதிலளிக்குமாறு சட்டப்பேரவை செயலருக்கும் உத்தரவிட்டனர். இந்த உத்தரவை ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகிய 2 எம்எல்ஏக்களும் வரவேற்ற நிலையில், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

விளக்கம் அளிப்பதற்கு சபாநாயகர் அளித்த காலஅவகாசம் இன்றுடன் முடிவடையும் நிலையில், கூடுதல் அவகாசம் கோரி கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு சட்டப்பேரவை செயலரிடம் மனு அளித்துள்ளார். எம்எல்ஏ பிரபு சார்பில் அவரது வழக்கறிஞர் சட்டப்பேரவை செயலாளரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார். தகுதிநீக்கம் தொடர்பான சபாநாயகரின் நடவடிக்கைகளுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ள போதிலும், எம்.எல்.ஏ பிரபு கூடுதல் கால அவகாசம் கோரி மனு அளித்தார்.

இதுகுறித்து தற்போது விளக்கம் அளித்துள்ள பேரவைச் செயாலாளர், உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தடை உத்தரவு எம்.எல்.ஏ பிரபுவுக்கும் பொருந்தும். அதனால் அவர் தனியாக விளக்கம் அளிக்க தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சபாநாயகரின் நோட்டீஸை எதிர்த்து எம்.எல்.ஏ-க்கள் ரத்தினசபாபதி மற்றும் கலைச்செல்வன் மட்டுமே வழக்கு தொடர்ந்திருந்தனர். எம்.எல்.ஏ பிரபு வழக்கு தொடராத நிலையில் அவருக்குக்கான நோட்டீஸுக்கு உச்சநீதிமன்றத்தின் தடை பொருந்துமா என்று கேள்வி எழுந்தது. தற்போது பேரவைச் செயலகம் இந்த விளக்கத்தை அளித்துள்ளது. 

இதுகுறித்து பிரபு கூறுகையில், ’’நான் சென்றபோது சபாநாயகர் இல்லாததால் பேரவை செயலாளர் சீனிவாசனிடம் மனு அளித்தேன். அதிமுகவை உரிமை கோரும் சசிகலா அணியில்தான் இன்னும் உள்ளேன். அமமுக என்பது அதிமுகவின் இன்னொரு அணி என விளக்கமளிக்க இருந்தேன். சபாநாயகர் உத்தரவுக்கு தடை விதித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மனுவில் சுட்டிகாட்டினேன். மற்ற இரண்டு எம்.எல்.ஏக்களின் நோட்டீசுக்கு தடை விதித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எனக்கும் பொருந்தும்” எனத் தெரிவித்தார்.