அவருக்கு என்ன உணவு பிடிக்கும் என்று அவரிடம் கேட்டு தெரிந்து கொண்டு அந்த உணவுகளை பரிமாறியபடியே இவற்றை விவாதிப்பேன். என அவர் கூறியுள்ளார். வானதி சீனிவாசனின் இந்த கருத்து அரசியலில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் அவர்களுக்கு என்ன உணவு பிடிக்கும் என்பதை கேட்டுத் தெரிந்துகொண்டு, அந்த உணவுகளை அவருக்கு பரிமாறிக் கொண்டே அவருடன் அரசியல் முரண்பாடுகள் குறித்து விவாதிப்பேன் என பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். அப்போது சகோதரர் திருமாவளவனுக்கு ஆன்ம எழுச்சி பற்றி கோல்வால்கரின் புத்தகங்களையும், இந்துத்துவ அம்பேத்கர் புத்தகத்தையும் அவருக்கு பரிசளிப்பேன் என்றும் அவர் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தொடர்ந்து பாஜகவுக்கு எதிராக களமாடி வரும் நிலையில், வானதி சீனிவாசன் இவ்வாறு கூறியுள்ளார்.
பாசிச எதிர்ப்பு.. சனாதன எதிர்ப்பு.. இந்துத்துவ எதிர்ப்பு என அம்பேத்கரிய, பெரியாரிய கொள்கைகளின் அடிப்படையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை முன்நகர்த்தி செல்கிறார் திருமாவளவன். அவர் மேடை தோறும் தான் அம்பேத்கரின் பிள்ளை என்றும் தான் பெரியாரின் சீடர் என்றுமே முழங்கும் தலைவராகவே இருந்து வருகிறார். கிட்டத்தட்ட திராவிட கொள்கைகள் ஒத்ததாகவே விடுதலை சிறுத்தைகள் கொள்கையும் உள்ளது.

மாணவப் பருவத்திலேயே மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பேச்சால் ஈர்க்கப்பட்டு திமுகவின் மாணவர் அணியில் தன்னை ஐக்கியப் படுத்திக் கொண்டவர் திருமாவளவன். பின்னர் தலித் மக்கள் ஒடுக்குமுறைக்கு எதிராக களமாட வேண்டுமென முடிவு செய்து அவர் விடுதலை சிறுத்தைகள் என்ற கட்சியை துவக்கி, பல இன்னல்கள், எதிர்ப்புகள், சவால்களுக்கு மத்தியில் அக்காட்சியை தவிர்க்க முடியாத பேரியக்கமாக கட்டி அமைத்துள்ளார். எத்தனையோ எதிர்ப்புகள், அவதூறுகள் என அனைத்தையும் தாண்டி தமிழகத்தில் தலித்தியம், தமிழ் தேசியம், மதவாத எதிர்ப்பு என்ற கருத்தியலில் களமாடி விடுதலை சிறுத்தைகள் கட்சியை தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக கட்டி அமைத்துள்ளார் திருமாவளவன். மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி காலம்தொட்டு திமுக கூட்டணியில் கொள்கை பிறழாது திமுகவின் உற்ற நண்பனாக, பாசிச எதிர்ப்பின் பகைவனாக களமாடி வருகிறார் திருமாவளவன். குறிப்பாக மோடி தலைமையிலான பாஜக மத்தியில் ஆட்சி அமைத்தது முதல் மிகக் கடுமையாகவும், தீவிரமாகவும், மோடி அரசின் ஒவ்வொரு கொள்கைகளையும், திட்டங்களையும் எதிர்த்து வரும் அரசியல் தலைவர்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார் திருமாவளவன்.
அடுத்த முறை பாஜக ஆட்சி அமைத்தால் இந்திய தேசத்தை காப்பாற்றவே முடியாது என்றும், ஜனநாயக சக்திகள் விழித்துக்கொள்ள வேண்டும், காங்கிரஸ் அல்லாத கூட்டணி அமைந்தால் அது பாஜகவுக்கே வாய்ப்பாக அமைந்துவிடும், எனவே திமுக போன்ற கட்சிகள் காங் அல்லாத மூன்றாவது அணிக்கு உறுதுணையாக இருக்கக் கூடாது. காங்கிரசின் கரத்தை வலுபடுத்தினால் மட்டுமே பாஜகவை வீழ்த்த முடியும் என மேடைதோறும் முழங்கி வருகிறார் திருமாவளவன்.தமிழகத்தைப் பொறுத்தவரையில் திமுகவை காட்டிலும் பாஜகவை கடுமையாக எதிர்க்கும் கட்சியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி இருந்து வருகிறது. தலித் எதிர்ப்பு, இஸ்லாமிய எதிர்ப்புதான் பாஜகவின் கொள்ளை என பாஜகவை ஒவ்வொறு மேடையிலும் அம்பலப்படுத்தும் கட்சியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி செயல்பட்டு வருகிறது. தேசிய அளவில் பெரும்பாலான தலித் தலைவர்கள் பாஜகவுடன் கை கோர்த்து விட்ட நிலையில் தென்னிந்தியாவின் தலித் தலைவர்களில் பெரும் சக்தியாக விளங்கும் திருமாவளவன் மட்டும் பாஜகவையும், அதன் சித்தாந்தத்தையும் மூர்க்கமாக எதிர்த்து வருகிறார்.

சமீபத்தில் அவர் மனுஸ்மிருதி பெண்களை இழிவுபடுத்துகிறது என பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மனுஸ்மிருதியில் பெண்கள் இழிவுபடுத்தப்பட்டுள்ளனர் என அவர் கூறியதை திருமாவளவன் பெண்களை இழிவுபடுத்தி விட்டார் என பாஜகவினர் அவருக்கு எதிராக பிரச்சாரத்தை கட்டமைத்தனர். ஆனால் தனது பிரச்சார வியூகத்தால் அதை முறியடித்தார் திருமாவளவன். அதேபோல் இந்து கோவில்களில் உள்ள சிலைகள் ஆபாசமானவை, தற்போது உள்ள சிவன் கோவில்கள் அனைத்தும் ஒரு காலத்தில் புத்த விகாரங்களாக இருந்தவை என அவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்படி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் பாஜகவுக்கும் விடுதலை சிறுத்தைகளுக்கு மான மோதல் பெருகி வருகிறது. பாஜகவால் எனக்கு விலை பேசப்படுகிறது, நான் நினைத்தால் பாஜக கொடுக்கும் பதவிகளை பெற்றுக்கொண்டு பவுசாக என்னால் இருக்க முடியும். ஆனால் திருமாவளவன் அம்பேத்கரின் பிள்ளை, பெரியாரின் சீடன், எப்போதும் திருமாவளவன் கொள்கையில் சமரசம் செய்து கொள்ளமாட்டான் என அவர் பாஜகவுக்கு சவால் விடுத்து வருகிறார்.
காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்பதில் காங்கிரஸ்காரர்களை காட்டிலும் திருமாவளவன் அதிக முனைப்பு காட்டி வருகிறார். திமுக காங்கிரஸை வலுப்படுத்த வேண்டியது அவசியம் குறித்து சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் விருது வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு திருமாவளவன் கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒருபுறம் பாஜக- விடுதலை சிறுத்தைகள், பாஜக- திருமாவளவன் மோதல் நீடித்து வரும் நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் அவர்களை பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும் கோவை சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் அவரின் திறமைகளை பாராட்டி பேசியுள்ளதுடன் தொல். திருமாவளவன் அவர்களுக்கு பிடித்த உணவு எது என்று கேட்டு அறிந்து அதை அவருக்கு பரிமாறிக்கொண்டே கொள்கை முரண்பாடுகள் குறித்து விவாதிக்க வேண்டும் என தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ள வானதி சீனிவாசன் அதில் கூறியிருப்பதாவது:- சகோதரர் திருமாவளவன் தனது காலத்திலேயே ஒரு கட்சியை உருவாக்கி பெரிய அளவில் வளர்த்தெடுத்த திறமையான நபர். நம் சமூகத்தில் தீண்டாமை இருப்பதை யாரும் மறுக்க முடியாது, அதை நாம் அனைவரும் இணைந்துதான் முறியடிக்க வேண்டும். ஆனால் அம்பேத்கரின் கருத்துக்களில் சிலவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு ஒட்டுமொத்தமாக இந்த நாட்டில் பண்பாடுகளையும் மரபுகளையும் அழித்தொழிக்க நினைக்கும் அளவுக்கு அவரது பேச்சுக்கள் இருக்கின்றன. அது குறித்து அவரிடம் உரையாட வேண்டும் என்று விரும்புகிறேன். மதமாற்றத்தால் நம் பண்பாடு, நாகரிகம், கலாச்சாரம் அழிந்து கொண்டிருக்கிறது என்பதை எடுத்துரைக்க வேண்டும். ஆன்ம எழுச்சி பற்றிய கோல்வால்கரின் புத்தகங்களையும், சகோதரர் வெங்கடேசன் எழுதிய" இந்துத்துவ அம்பேத்கர் " புத்தகத்தையும் அவருக்கு பரிசளிக்க வேண்டும்.

அதே போல் அவருக்கு என்ன உணவு பிடிக்கும் என்று அவரிடம் கேட்டு தெரிந்து கொண்டு அந்த உணவுகளை பரிமாறியபடியே இவற்றை விவாதிப்பேன். என அவர் கூறியுள்ளார். வானதி சீனிவாசனின் இந்த கருத்து அரசியலில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. எதிர் எதிர் துருவத்தில் இருக்கும் தலைவருடன் கருத்து கொள்கை முரண்பாடுகள் குறித்து நட்புடன் விவாதிக்க வேண்டும் என்ன வானதி தனது விருப்பத்தை வெளிப்படுத்தி இருப்பது அரசியல் முதிர்ச்சியின் வெளிபாடாகவே பார்க்கப்படுகிறது.
