I have answered all questions regarding Jayalalithaa
ஜெயலலிதா தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளேன் என்று விசாரணை ஆணையத்தில் ஆஜரான முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன ராவ் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி சென்னை, அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு, லண்டன் டாக்டர், டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள், அப்போலோ டாக்டர்கள் என சிகிச்சை அளித்தனர். 75 நாட்கள் சிகிச்சை பெற்று ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்தார். ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டது.
இதையடுத்து ஜெ., மரணம் தொடர்பாக, ஓய்வுபெற்ற நீதிபதி, ஆறுமுகசாமி தலைமையிலான, விசாரணை கமிஷன் அமைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதன்படி விசாரணை கமிஷன் விசாரணை செய்து வருகின்றது.
இதில், சசி குடும்பத்தாரிடமும், ஜெ குடும்பத்தாரிடமும் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தி வருகிறார். மேலும் ஜெயலலிதாவுடன் நெருங்கி பழகியவர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றார்.
அந்த வகையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, மற்றும் அவரது தம்பி தீபக் ஆகியோரிடமும் விசாரணை நடைபெற்றது.
இதில், திமுகவை சேர்ந்த டாக்டர் சரவணன், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் குழுவில் இருந்த ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் நாராயணபாபு, மருத்துவக் கல்வி இயக்குநர் விமலா, மயக்கவியல் துறை பேராசிரியை கலா, உதவி பேராசிரியர் முத்துச்செல்வன் உள்ளிட்டோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
மேலும் இதில், முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன ராவ், ஜெயலலிதாவின் ஆலோசகராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.
ஜெயலலிதாவின் ஆலோசகராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன் புதன்கிழமை நீதிபது ஆறுமுகசாமி முன் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இந்நிலையில், ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது தலைமை செயலாளராக இருந்த ராமமோகன் ராவுக்கு விசாரனை கமிஷன் சம்மன் அனுப்பியது.
அதன்படி இன்று காலை விசாரணை கமிஷனில் ஆஜரானார். அவரிடம் 4 மணி நேரம் கிடுக்குப்பிடி விசாரணை நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜெயலலிதா தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளேன் என்று தெரிவித்தார்.
