இராமநாதபுரம்
 
நான் சாதாரணமானவன் என்பதால்தான் என் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறாரா? என்று தன்மீது நீதிமன்ற அவதிப்பு வழக்கு போட்ட வழக்குரைஞர் பெண்ணை சரமாரியாக கேள்வி கேட்டார் தங்க தமிழ்செல்வன்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் உத்தரவின்பேரில் இராமநாதபுரம் மாவட்ட அ.ம.மு.க. உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைப்பெற்றது.

பட்டணம்காத்தான் ஊராட்சி டி–பிளாக்கில் உள்ள ஏ.பி.சி. திருமண மகாலில் நடைப்பெற்ற இந்தக் கூட்டத்திற்கு தங்க தமிழ்செல்வன் தலைமை தாங்கினார். அவருக்கு அ.ம.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்தக் கூட்டதில் மாவட்ட செயலாளர் வது.ந.ஆனந்த், முன்னாள் அமைச்சர்கள் வது.நடராஜன், ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு வாரிய முன்னாள் தலைவர் ஜி.முனியசாமி, சிறுபான்மை நலப்பிரிவு செயலாளர் ஆர்.கே. ரம்லி, நகர் செயலாளர் ரஞ்சித், திருவாடானை இரவுசேரி முருகன், 

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகன், முன்னாள் நகரசபை தலைவர் கவிதா சசிகுமார், தொகுதி பொறுப்பாளர்கள் பரமக்குடி சுப்பிரமணியன், முதுகுளத்தூர் முத்து, முன்னாள் மாவட்ட செயலாளர் சோமாத்தூர் சுப்பிரமணியன், மாவட்ட இணை செயலாளர் இந்திரா மேரி மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்துப் பேசினர்.

இக்கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் மண்டபம் ஸ்டாலின் ஜெயச்சந்திரன், ராமநாதபுரம் முத்தீசுவரன், போகலூர் ராஜாராம் பாண்டியன், திருப்புல்லாணி முத்துச்செல்வம், நகர் செயலாளர்கள் கீழக்கரை சுரேஷ், மண்டபம் களஞ்சியம் ராஜா உள்பட கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர். 

கூட்டத்திற்கு பின்னர் தங்க தமிழ்செல்வன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், "என் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக சம்மன் அனுப்பப்பட்டது குறித்து பத்திரிகையில் செய்தி படித்தேன். 

தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு குறித்து என்னுடைய உணர்வை வெளிப்படுத்தினேன். ஸ்ரீமதி என்பவர் என் மீது கிரிமினல் அவமதிப்பு வழக்கை தொடர்ந்துள்ளார். அந்த பெண்மணியை பாராட்டுகிறேன். 

நீதிமன்றத்தை அவமதித்ததற்காக குடிமகன் என்ற முறையில் அவர் வழக்கை தொடர்ந்து இருக்கிறார். அவரிடம் நான் ஒரு கேள்வியை கேட்க விரும்புகிறேன். 

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது சக நீதிபதிகள் நான்கு பேர் நேரடியாக குற்றம்சாட்டி பேட்டியளித்தனர். உச்சநீதிமன்ற வரலாற்றிலேயே முதன்முறையாக இப்படிப்பட்ட சம்பவம் நடந்தது. 

இந்த பேட்டியை அடிப்படையாக வைத்து அந்த நால்வர் மீதும் இந்த பெண்மணி ஏன் வழக்கு தொடுக்கவில்லை? அவர்கள் மீது வழக்கு தொடர்ந்தால் வழக்குரைஞர் பதவி போய்விடும் என்ற பயமா? நான் சாதாரணமானவன் என்பதால்தான் என் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறாரா? இந்த கேள்விகளை அவரிடம் கேட்க விரும்புகிறேன்.

தகுதி நீக்க வழக்கை விசாரிக்க மூன்றாவது நீதிபதியாக சத்திய நாராயணாவை நியமித்துள்ளனர். அவரை சந்தித்து தகுதி நீக்க வழக்கை திரும்ப பெறுவது தொடர்பாக மனு கொடுக்க இருக்கிறேன். அதை அவர் ஏற்றுக்கொண்டால் மகிழ்ச்சி. இல்லாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க இருக்கிறேன்" என்று அவர் தெரிவித்தார்.