வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, உள்ளிட்ட அமைச்சர் பட்டாளம்  கோட் சூட்டில் கலக்கி வரும் நிலையில், அமெரிக்காவிற்கே போனாலும் வேட்டி சட்டைதான் என் உடை என்று அமெரிக்காவில் வேட்டிச்சட்டையில் வலம்வரும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. 

தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் அமெரிக்கா, லண்டன், துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு முதலமைச்சர் உட்பட அமைச்சர்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அமெரிக்காவிற்கும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பின்லாந்திற்கும்.  வனத்துறை அமைச்சர் இந்தோனேசியாவிற்கும். கால்நடைத்துறை அமைச்சர் ஆஸ்த்திரேலியாவிற்கும் பயணம் மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் வேட்டிச்சட்டை சகிதம் வலம் வந்த  முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள்  வெளிநாட்டிற்கு சென்றவுடன் கோட்டு சூட்டுக்கு மாறிவிட்டனர்.

அமெரிக்காவில் முதலமைச்சர் கோட்டுசூட்டில் வலம்வருவது  தமிழக அரசியல் தளத்தில் மட்டும் அல்ல அனைத்து தரப்பு மக்களையும் வியந்து ரசிக்க வைத்துள்ளது. இந்நிலையில் முதலமைச்சரைlத் தொடர்ந்து  தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி சம்பத். மற்றும் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆகியோர் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.  அமெரிக்கா சென்றவுடன் அமைச்சர் எம்.சி சம்பத்தும் மற்ற அமைச்சர்களை போல கோட்டு சூட் மற்றும் பேன்ட் டீ ஷர்ட்டுக்கு மாறினார். ஆனால் அவருடன் சென்ற பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அங்கு சென்ற பின்னரும் தமிழகத்தில் எப்படி இருந்தாரோ அதே போல்  வேட்டிச்சட்டையிலேயே இருந்தார். 

பின்னர் தங்கியிருந்த ஒட்டலில் இருந்து வெளியில் புறப்படுவதற்கு முன்னர், அங்கிருந்த முதலமைச்சரும், அமைச்சர்களும்  பல இடங்களுக்கு நாம் செல்ல வேண்டியிருக்கிறது எனவே கோட்சூட் அல்லது பேன்ட் சட்டை மாற்றிக்கொள்ளுங்கள்  என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் கூறினர். ஆனால் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஏற்க மறுத்துவிட்டார். அதெல்லாம் வேண்டாம் அண்ணே... கோட்டு சூட்டெல்லாம் எனக்கு சரிபட்டு வராது... நான் இப்படியே இருந்துவிடுகிறேன் அண்ணே... என்று அப்பாவியாக கூறினார்.  சரி இனிமேல் அவரை டிஸ்ட்ரப் செய்ய வேண்டாம்  விட்டு விடுங்கள் என  முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் வெளியில் புறப்பட்டு  அமெரிக்காவில் உள்ள பஃபல்லோ கால்நடைப்பண்ணை, மற்றும் அமெரிக்காவின் வணிக கேந்திரமாக திகழும்  வால் ஸ்ட்ரீட், மற்றும் நயகரா நீர் வீழ்ச்சி உள்ளிட்ட  பல இடங்களுக்கு சென்றனர். அவர்களுடன் சென்ற அமைச்சர் ராஜேந்திர பாலாஜி  எல்லா இடங்களுக்கும்  வேட்டிச்சட்டையிலேயே கம்பீரமாக வலம் வந்தார்.  

அமைச்சரின் உடையை கண்ட அமெரிக்கர்கள் சிலர் அவரது உடையை ரசித்ததுடன் அவருடன் செல்பியும் எடுத்துக் கொண்டனர். அமைச்சரும் தனக்கே உரிய வெள்ளந்தி சிரிப்புடன் அவர்களுக்கு போஸ் கொடுத்தார். அமெரிக்காவில் வேட்டிச்சட்டையில் வலம்வரும் அமைச்சரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது.  அமெரிக்காவிற்கு என்ன  ஹாங்காங்குக்கே போனாலும் நம் அமைச்சர் வேட்டை சட்டையில் தான் வலம் வருவார் என்றும். உண்மையான பச்சைத் தமிழன் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிதான் என்றும் நெட்டீசன்கள் அவரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.