அண்மையில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசிய முக்குலத்தோர் புலிப்படை தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் முதலமைச்சரையும், போலீஸ் அதிகாரிகளையும் அவதூறாக பேசினார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் ஜானீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த  கருணாஸ், நான் கூலிப்படை வைத்திருக்கவில்லை,  புலிப்படைதான் வைத்திருக்கிறேன் என தெரிவித்தார், சாதாரண மக்கள் சட்டத்தைக் கையில் எடுக்க எப்படி உரிமையில்லையோ, அதைப் போல காவல் துறையினருக்கும் சட்டத்தைக் கையில் எடுக்க உரிமையில்லை என கூறினார்.

எனது பிரச்சனைகள் குறித்த பேசுவதற்கு நான் முதலமைச்சரை சந்திக்க முயன்றாலும் அது முடியாது என்றும், அவர் தொழிலதிபர்கள், காண்ட்ராக்டர்கள், கொங்கு அமைப்பைச் சேர்ந்தவர்களை மட்டும் தான் பார்ப்பார் என்றும் குற்றம்சாட்டினார்.

நான் தவறாக பேசவில்லை என்றும், யாராவது என்னை அடித்தால் திருப்பி அடிப்பேன் என்றும், வெட்டினால் திரும்ப வெட்டுவேன் என்றும் கருணாஸ் தெரிவித்தார். கூவத்தூர் விவகாரங்களை வெளியே சொன்னால் அது இந்தியாவையே உலுக்கும் என்றும், நேரம் வரும்போது அதை கண்டிப்பாக வெளியிடுவேன் என்றும் கருணாஸ் குறிப்பிட்டார்.

நான் எப்போதுமே வெளிநாட்டு மது வகைகளைத்தான் குடிப்பேன் என்றும், தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் லோக்கல் சரக்கை குடித்தால் செத்துடலாம் என்றும் கருணாஸ் சர்ச்சைக்குரிய வகையில் மீண்டும் பேசியுள்ளார்.