தமிழகத்தில் அண்மை காலமாக இந்தி திணிப்பு குறித்த சர்ச்சை எழுந்துள்ளது. மும்மொழி கொள்கையில் இந்திக்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், விமான நிலையத்தில், ‘இந்தி தெரியாத நீங்கள் இந்தியரா’ என்று பாதுகாப்பு படையினர் கேள்வி எழுப்பி அவமதித்ததாக திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்தார். இதேபோல ஆயுஷ் பயிற்சி வகுப்பில் இந்தி தெரியாதவர்கள் வெளியேறலாம் என்று அத்துறையின் செயலாளர் பேசியதும் சர்ச்சையானது.
இந்நிலையில்தால் மத்திய அரசு துறையிடம் ஆங்கிலத்தில் எழுப்பிய கேள்விக்கு இந்தியில் பதிலளித்த விவகாரமும் சமூக ஊடகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதழ் ஒன்றில் பேட்டி அளித்த இயக்குநர் வெற்றிமாறன், 2011ல் இந்தி தெரியாத காரணத்தால் தீவிரவாதி போல நடத்தப்பட்டேன் என்று அளித்த பேட்டியும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், ‘தமிழ் தெரியாது போடா, நான் இந்தியன்; எனக்கு இந்தி தெரியாது, நான் தமிழ் பேசும் இந்தியன்’ என்ற வாசகங்கள் அடங்கிய டீசர்ட்டுகள் பிரபலமாகிவருகின்றன.

 
இந்த டீசர்டுகள் சமூக ஊடகங்களிலும் கவனம் ஈர்த்துள்ளன. இதை சினிமா பிரபலங்கள் யுவன் சங்கர் ராஜா, சாந்தணு ஆகியோர் அணிந்து ட்விட்டரில் பகிர்ந்தனர். இதனையடுத்து பலரும் ‘இந்தி தெரியாது போடா’ என்ற ஹாஷ்டேக்கை வைத்து இந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரில் வைரல் ஆக்கியுள்ளனர். அரசியல் கட்சியின், பிற அமைப்பினரும் இதில் குதித்ததால், இந்த வாசகம் இந்திய அளவில் தொடர்ந்து டிரெண்டிங்கில் உள்ளது.