பாஜகவின் மூத்த தலைவரும், அக்கட்சியால் ஒதுக்கப்பட்டவருமான முன்னாள் துணைப் பிரதமர் அத்வானி, தனக்கு முதலில் தேசம் பின்னர் தான் கட்சி என்றும், மாற்றுக் கருத்து கொண்டவர்களை  இந்த நாட்டுக்கு எதிரானவர்கள் என்று ஒரு போதும் சொன்னதில்லை என தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியில் 6 முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற பாஜக மத்த தலைவர் அத்வானி இம்முறை புறக்கணிக்கப்பட்டு அதே தொகுதிக்கு அமித் ஷாவை வேட்பாளராக பாஜக அறிவித்தது. இது பாஜகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய பாஜக ஆட்சியில் ஆளும் தரப்பை எதிர்ப்பவர்கள் தாக்கப்படுவதும், வழக்குகளைச் சந்திப்பதுமாக இருந்து வருகிறது, புல்வாமா தாக்குதலுக்குப் பிறகே நடத்தப்பட்ட பாலகோட் தாக்குதல் பற்றி விமர்சன பூர்வமாக யார் பேசினாலும் அவர்களை தேச விரோதிகள் என்று வர்ணிக்கும் போக்கு பாஜகவிடத்தில் நீடித்து வருகிறது.

இதே போல் ரஃபேல் விவகாரத்தில் கடுமையான கேள்விகளை எதிர்க்கட்சிகளும் பத்திரிகையும் கேள்வி எழுப்பிய போதும் இதே தேச துரோக பேச்சு எழுந்தது.

எழுத்தாளர் கல்புர்கி, கர்நாடகா பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்குகள், மொகமது அக்லக் பசு இறைச்சி வைத்திருந்ததாக் கொலை செய்யப்பட்டது, தொடர்ந்து பசு ஆதரவாளர்கள் ஒரு பிரிவினரை நோக்கி தாக்குவதும் தொடர பாஜக ஆட்சி மீது வெறுப்பரசியல் செய்வதாக கடும் விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் மூத்த தலைவர் அத்வானியே பாஜகவின் தற்போதைய கொள்கைகளை எதிர்த்து தமது பதிவில் விளக்கம் அளித்துள்ளார். அதில், “ஜனநாயகம் ஜனநாயக மரபுகளை கட்சிக்குள்ளும், பரந்துபட்ட தேசிய மட்டத்திலும் பாதுகாப்பது என்பது பாஜகவின் பெருமைக்குரிய அடையாளமாகும் என குறிப்பிட்டுள்ளார்.

பாஜக தொடங்கியது முதல் நம்முடன் அரசியல் ரீதியாக உடன்படாதவர்களை நாம் விரோதிகளாகப் பார்த்ததில்லை. அதே போல் இந்திய தேசியம் என்ற நம் கருத்தாக்கத்தில் ஒரு போதும் அரசியல் ரீதியாக நம்முடன் முரண்படுபவர்களை நாம் தேச விரோதிகள் என்று கருதியதில்லை. சுதந்திரம், ஜனநாயகம், நேர்மை, நியாயம், ஊடக சுதந்திரம் ஆகியவற்றை பாதுகாப்பதில் பாஜக எப்போதும் முன்னிலையில் இருந்துள்ளது” என்று எழுதியுள்ளார்.

ஆனால் தற்போது அந்த சகிப்புத் தன்மை இல்லை என தனது டுவிட்டர் பதிவில் வருத்தம் தெரிவித்துள்ளார். அத்வானியின் இந்த கருத்து பாஜகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.