அதிமுகவில் இருந்து என்னை நீக்குவதற்கு ஓபிஎஸ்க்கோ, இபிஎஸ்க்கோ அதிகாரம் இல்லை  என்றும், அவர்கள் இருவரையும் தேர்தல் ஆணையம் ஒருங்கிணைப்பாளர்களாக ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் செய்தித் தொடர்பாளராக இருந்த முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி சற்றுமுன் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதற்கு முக்கிய காரணமாக கருதப்படுவது இன்று அவர் பாஜகவுக்கு எதிராக பேசியதால்தான் என கூறப்படுகிறது.

மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்துள்ளது. இது தொடர்பாக கே.சி.பழனிசாமி பேசும்போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை என்றால் பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்கும் என தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று மாலை கே.சி.பழனிசாமியை கட்சி மற்றும் பொறுப்புகளில் இருந்து நீக்கி ஓபிஎஸ், இபிஎஸ்ம் உத்தரவிட்டனர். இது அதிமுகவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து கருத்துத் தெரிவித்த கே.சி.பழனிசாமி, அதிமுகவில் இருந்து என்னை நீக்குவதற்கு ஓபிஎஸ்க்கோ, இபிஎஸ்க்கோ அதிகாரம் இல்லை  என்றும், அவர்கள் இருவரையும் தேர்தல் ஆணையம் ஒருங்கிணைப்பாளர்களாக ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டார்.

இவர்கள் இருவருக்கும் கட்சியில் எந்த அதிகாரமும் இல்லை என்றும் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் சசிகலாவின் காலில் விழுந்தவர்கள் என்றும் கே.சி.பழனிசாமி தெரிவித்தார்.

பிரதமர் மோடியைப் பார்த்து ஓபிஎஸ், இபிஎஸ் ம் பயப்படுகிறார்கள் என்றும், ஆனால் நான் பயப்படப் போவதில்லை என்றும் கே.சி.பழனிசாமி கூறினார். மத்திய அரசுக்கு பயந்து தான் என் மீது நடவடிக்கை எடுத்துள்ளார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.