I do not know who Amruta is - TTV Dinakaran

பெங்களூருவைச் சேர்ந்த பெண் அம்ருதா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றமே தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் அது குறித்து ஏன் கேள்வி எழுப்புகிறீர்கள் என்று செய்தியாளர்களிடம் கேட்டார் டிடிவி தினகரன்.

பெங்களூருவைச் சேர்ந்த மஞ்சுளா (எ) அம்ருதா என்பவர், மறைந்த ஜெயலாலிதாவின் மகள் என்று கூறி உச்சநீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். பெற்றோரான ஜெயலலிதாவின் தங்கையும், அவரது கணவரும் இறக்கும் தருவாயில் இதனைத் தெரிவித்ததாகவும் மனுவில் அம்ருதா கூறியிருந்தார். ஜெயலலிதாவின் உடலை எடுத்து, டி.என்.ஏ. பரிசோதனை செய்தால் தான் மகள் என்ற உண்மை தெரிந்து விடும் என்றும் அதில் கூறியிருந்தார். 

இந்த மனு மீதான விசாரணை நேற்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் நிராகரித்து விட்டனர். பெங்களூரு நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடரவும் அம்ருதாவுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

இந்த நிலையில், அதிமுக அம்மா அணியின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் திருச்சியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை என்றும், அதிமுகதான் எங்கள் இயக்கம் என்றும் கூறினார். நடைபெற உள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எங்களுக்கும் திமுகவுக்கும் மட்டுமே போட்டியிருக்கும் என்றார்.

எங்கள் அணி சார்பில் தனிக்கொடியை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று கூறிய அவர், இரட்டை இலை வழக்கின் தீர்ப்பில் கொடி, கட்சி அலுவலகம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும் தெரிவித்தார். மேலும் இரட்டை இலை வழக்கில் மேல்முறையீடு செய்யப்படும் என்றும் விரைவில் இந்த ஆட்சி, வீட்டுக்கு அனுப்பப்படும் என்றும் கூறினார்.

தான் ஜெயலலிதாவின் மகள் என்று கூறி பெங்களூருவைச் சேர்ந்த பெண் அம்ருதா என்பவர் நீதிமன்றத்தில் மனு செய்தது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு, உச்சநீதிமன்றமே அவரது மனுவை தள்ளுபடி செய்துவிட்ட நிலையில் இது குறித்து ஏன் கேள்வி எழுப்புகிறீர்கள் என்று டிடிவி தினகரன் கூறினார்.