வைகோவுக்காக பம்பரமாக சுழல்வேன்...நாஞ்சில் சம்பத் அதிரடி முடிவு..! 

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ போட்டியிடுகிற தொகுதியில் நிச்சயம் பிரசாரம் செய்வேன் என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

மதிமுகவில் நட்சத்திர பிரச்சாகராக இருந்த நாஞ்சில் சம்பத், அதிமுகவுக்கு சென்று, பின்னர் அங்கிருந்து தினகரன் அணியில் அரசியல் செய்துவந்தார். கருத்துவேறுபாடு காரணமாக தினகரன் அணியிலிருந்து விலகி தற்போது இலக்கிய கூட்டங்களில் பங்கேற்றுவருகிறார். அண்மையில் வெளியான ‘எல்கேஜி’ படத்திலும் நடித்திருந்தார். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், மீண்டும் அரசியல் களத்துக்கு திரும்ப நாஞ்சில் சம்பத் முடிவு செய்துவிட்டார். 

மதிமுகவில் மீண்டும் இணைய நாஞ்சில் சம்பத் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டுவரும் நிலையில், வைகோ போட்டியிடும் தொகுதியில் தீவிர பிரசாரம் செய்ய இருப்பதாக நாஞ்சில் சம்பத் தெரிவித்திருக்கிறார். 

இது பற்றி அவர் கூறும்போது, “வைகோவோடு ஒரே மேடையில் பேச வேண்டும்; அவருடன் இணைய வேண்டும் என்பது நாஞ்சில் சம்பத்தின் இலக்கு அல்ல. பாஜக பாசிச ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதே என் நோக்கம். அதற்காகத் தமிழ்நாடு முழுக்க பிரசாரம் செய்வேன். வைகோ போட்டியிடும் தொகுதியிலும் நிச்சயமாகப் பிரசாரம் செய்வேன்.” என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்திருக்கிறார்.

இலக்கியப் பக்கம் சென்று விட்டு மீண்டும் அரசியலுக்குள் வந்ததற்கான காரணங்களையும் நாஞ்சில் சம்பத் தெரிவித்திருக்கிறார். “இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சிதைக்க வேண்டும். ஒரே நாடு, ஒரே மொழி என்று சொல்லி இந்தியாவின் இருப்பையே கேள்விக்குறியாக்குகிற ஆபத்தான சக்திகளிடம் தற்போது நாடு சிக்கி உள்ளது. 35 ஆண்டு காலப் பொதுவாழ்வில் இதை எதிர்த்து பேசிவந்த என்னால், வகுப்புவாத சக்திகளின் பொய்ப் பிரச்சாரங்களைக் கண்டும் காணாமல் போக முடியாது. 

கட்சி அரசியலைவிட்டு நான் வெகுதூரம் விலகி வந்தது உண்மைதான். ஆனாலும் தத்துவ அரசியலிலிருந்து விலகவில்லை. இந்தத் தேர்தலில் மோடியை வீட்டுக்கு அனுப்ப, திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று பிரச்சாரம் செய்வேன்.” என்கிறார் நாஞ்சில் சம்பத்