சௌந்தர்யாவை ஆசைவார்த்தை கூறி திருமணம் செய்து கொள்ளவில்லை.என் அப்பா அம்மா சம்மதத்துடனே கல்யாணம் செய்திருக்கிறோம். நான் சௌந்தர்யா குடும்பத்தில் யாரையும் மிரட்டவில்லை.என் மீது வீண்வதந்திகளை பரப்புகிறார்கள் என கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு வீடியோ மூலம் விளக்கமளித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ பிரபுக்கும், தியாகதுருகத்தை சேர்ந்த சௌந்தர்யாவுக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. ஆனால் இந்த திருமணத்தில் பெண் வீட்டாருக்கு விருப்பமில்லை என்று தெரிகிறது. இதனால் அவர்களின் எதிர்ப்பை மீறி காதலியை எம்எல்ஏ பிரபு கரம் பிடித்துள்ளார். இதைத்தொடர்ந்து எம்எல்ஏ பிரபுவிடமிருந்து தனது மகள் சௌந்தர்யாவை மீட்டுத்தரக்கோரி தந்தை சாமிநாதன் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்துள்ளார். அத்துடன் எம்எல்ஏ பிரபு வீட்டின் முன்பு தீக்குளிக்க முயன்றார். இதைக்கண்ட தியாகதுருகம் போலீசார் அவரை பத்திரமாக மீட்டனர்.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள எம்எல்ஏ பிரபு, நான் சௌந்தர்யாவை கடத்தி வந்து திருமணம் செய்து கொள்ளவில்லை. நான் அவரை காதலித்து தான் திருமணம் செய்து கொண்டேன். நாங்கள் இருவரும் காதலித்தோம். சௌந்தர்யா வீட்டில் காதலுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. அதனால் தான் எனது பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டோம். நான் அவரை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்துகொள்ளவில்லை என்று கூறியுள்ளார்.