I can not answer for dinakaran dream questions O Paneerselvam said

தினகரன் காணும் கனவுக்கெல்லாம் தம்மால் பதிலளிக்க முடியாது என துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஆர்கே நகர் தொகுதி சட்டசபை உறுப்பினராக இன்று பதவியேற்ற தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அ.தி.மு.க.வில் ரத்தமும் சதையுமாக உள்ள தொண்டர்கள் எங்கள் பக்கம் தான் உள்ளனர், மீதமிருக்கும் நாட்களில் பதவியை முழுசாக அனுபவிக்க வேண்டுமென்றால் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் எல்லோரும் தனக்கு ஆதரவாக வரவேண்டும் என கூறினார்.

மேலும், சசிகலா தலைமையிலான அ.தி.மு.க.வே உண்மையான ஆதிமுக என ஆர்.கே நகர் மக்கள் தீர்ப்பு வழங்கி விட்டனர். துரோக வரலாற்றில் துரோகத்திற்கு இடமில்லை என்றும் கூறினார். மனதளவில் பல அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் எங்கள் பக்கமே உள்ளனர் என்றும் தெரிவித்தார்.

ஏற்றிவிட்ட ஏணியை உதைத்துவிட்டு சில துரோகிகள் மக்கள் விரோத ஆட்சி நடத்துகின்றனர். அவர்கள் வழிவிட்டால் கட்சியை தக்கவைக்கலாம் என்றும் அவர் கூறினார். கடந்த சில நாட்களாகவே டிடிவி தினகரன் இந்த ஆட்சி விரைவில் கவிழும் வீட்டுக்கு அனுப்பப்படும் என கூறி வருகிறார்.

இந்நிலையில் சென்னை தலைமைச்செயலகத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் டிடிவி தினகரன் கூறி வருவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ஆட்சி கலையும் என டிடிவி தினகரன் கனவு காண்பதாக கூறினார். அவரது கனவுக்கெல்லாம் தான் பதில் சொல்ல முடியாது என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.