முதலமைச்சராக இருந்த ஓ.பி.எஸ் என்னைப் பார்த்துச் சிரித்தார் - நான் அவரைப் பார்த்துச் சிரித்தேன். அதற்காகவே அவரை தூக்கி விட்டார்கள் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடாமுத்தூர் தொகுதியில் தேவராயபுரம் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், ’’அம்மையார் ஜெயலலிதா இருந்தவரையில் பெட்டிப்பாம்பாக இருந்தீர்கள். எந்த அமைச்சர் எங்கே இருக்கிறார் என்று கூட தெரியாது. அந்த அம்மையாரின் மறைவுக்குப் பிறகு; அந்த மறைவே ஒரு மர்மம். நமது உறவினர் யாராவது இறந்தாலே அவரது உடல்நலன் குறித்து, துக்கம் விசாரிக்கும்போது விசாரிக்கிறோம். ஆனால் இறந்தது யார்? முதலமைச்சர் ஜெயலலிதா. நமக்கும் அவர்களுக்கும் எவ்வளவு கருத்து மாறுபாடுகள் வேறுபாடுகள் இருந்தாலும், நமக்கும் சேர்த்துத் தான் அவர் முதலமைச்சர். அவரது மரணத்தில் மர்மம்.

ஒரு சதவிகிதம் வாக்கு வித்தியாசத்தில் தான் நாம் வெற்றி வாய்ப்பை இழந்தோம். இப்போது எடப்பாடி பழனிசாமி அவர்களை முதலமைச்சர் என்கிறோம். அவர் எப்படி முதலமைச்சரானார் என்பது உங்களுக்குத் தெரியும்.  அப்படி வந்தவர் அவர். ஆனால் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தவர். இப்போது எடப்பாடி பழனிசாமி அவர்களை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்திருக்கலாம். ஆனால், மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஓ.பி.எஸ் அவர்களே ஏற்றுக்கொள்ளவில்லை. கூட்டணிக் கட்சியான பா.ஜ.க.வும் ஏற்றுக்கொள்ள வில்லை. நாங்கள் சொல்பவர்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்கிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், முதலமைச்சர் வேட்பாளர் என அறிவிக்கப்பட்டாலே, தங்களை முதலமைச்சர் என்று எண்ணிக் கொள்கிறார்கள். அதனை அறிவிப்பதற்கே இத்தனைக் குழப்பம்.

ஆனால், தி.மு.க. கம்பீரமாக யார் முதலமைச்சர் என்று கூறி தேர்தலில் நிற்கிறோம். இதைப்போல எடப்பாடியைச் சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம்.
அம்மையார் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று சொன்னது தி.மு.க. அல்ல; நான் அல்ல; எங்கள் கட்சியைச் சார்ந்தவர்கள் - கூட்டணிக் கட்சிகளைச் சார்ந்தவர்கள் அல்ல! முதன் முதலில் இதைச் சொன்னது, தற்போது துணை முதலமைச்சராக உள்ள ஓ.பன்னீர்செல்வம். ஜெயலலிதா இறந்தவுடன் முதலமைச்சராக ஓ.பி.எஸ் அவர்களை நியமித்தார்கள். அதெல்லாம் உங்களுக்குத் தெரியும். அவர்தான் பொறுப்பேற்றுக் கொண்டார். சிறிது காலம் பதவியிலிருந்தார். 

திடீரென்று சசிகலா அவரைத் தூக்கி விட்டார்கள். ஏன் தூக்கினார் என்று அதற்கு ஒரு காரணம் சொன்னார்கள். மறந்து விட மாட்டீர்கள்! நான் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக உட்கார்ந்து கொண்டிருக்கிறேன். முதலமைச்சராக இருந்த ஓ.பி.எஸ் என்னைப் பார்த்துச் சிரித்தார் - நான் அவரைப் பார்த்துச் சிரித்தேன். அதற்காகவே அவரை தூக்கி விட்டார்கள். சசிகலாவை முதலமைச்சராக அறிவித்தார்கள்’’ என அவர் தெரிவித்தார்.