மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மகள் எனக்கூறி வாரிசு சான்றிதழ் கேட்ட பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தான் கருப்பாக இருப்பதால் அதிகாரிகள் நம்ப மறுப்பதாவும் வேதனையோடு அந்த பெண் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளராகவும், முதலமைச்சராகவும் இருந்த ஜெயலலிதாவை அனைவரும் அன்போடு அம்மா என அழைப்பது உண்டு, ஆனால் சிலரோ ஜெயலலிதா மற்றவர்களுக்கு பெயரளவிற்கு தான் அம்மா, எனக்கு மட்டும் தான் உண்மையான அம்மா என கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருவார்கள். இதிலும் சிலர் ஜெயலலிதா போல் உடை அணிந்து கொண்டும் மேக்-அப் போட்டுக்கொண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருவார்கள். சில பெண்கள் மட்டும் தான் இது போன்று மகள் என்று கூறுவருகிறார்களா என்றால் இல்லை சில இளைஞர்களும் நான் தான் ஜெயலலிதாவின் மகன் என கூறி விளம்பரம் தேடி கொள்கிறார்கள். ஆனால் இந்த பரபரப்பு ஒரு சில நாட்கள் மட்டுமே நீடிக்கும் அடுத்த சில நாட்களிளேயே உண்மை வெளியாகி சுயரூபம் தெரிந்துவிடும்

இப்படி பட்ட நிலையில் தான் தற்போது புதிதாக மதுரையை சேர்ந்த மீனாட்சி என்ற பெண் தனது தாயார் ஜெயலலிதா என்றும் சென்னை போயஸ் தோட்டத்தில் வசித்து வந்ததாகவும், அவர் உடல்நிலை குறைவால் இறந்து விட்டதால் தனக்கு வாரிசு சான்றிதழ் தரும்படி ஆன்லைன் மூலம் மதுரை தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்துள்ளார். இதனை பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து அந்த வாரிசு சான்றிதழ் மனுவை நிராகரித்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த மீனாட்சி தாசில்தார் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சசிகலாவின் கணவர் நடராஜன் சந்தித்ததாகவும், காவல்துறை அதிகாரிகளிடம் தன்னை ஜெயலலிதாவின் மகள் என கூறி அறிமுகம் செய்து வைத்தாக கூறினார். இதை கேட்ட அங்கிருந்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

தான் கருப்பாக இருப்பதால் அதிகாரிகள் நம்ம மறுப்பதாக தெரிவித்த மீனாட்சி தான் தான் உண்மையான வாரிசு என நீதிமன்றம் சென்று நிருபிப்பேன் என கூறினார். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு இது போல ஒரு சிலர் ஜெயலலிதா பெயரை களங்கப்படுத்த கிளம்பியுள்ளதாக தெரிவித்த அதிமுக மூத்த நிர்வாகிகள், இது போன்ற நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
